Header Ads



விடுமுறை தினங்களும், கவனிக்க வேண்டியவையும்

நாட்டில் சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் நம்மை எதிர்நோக்கியுள்ள நிலையில் விடுமுறை தினங்களை மிகவும் கவனமாகவும் நிதானமாகவும்  கழிக்க வேண்டியது அவசியமாகும். அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக தலைதூக்கியுள்ள இனவாத நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இதனை மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

அந்தவகையில்  ஏப்ரல் விடுமுறை காலத்தை  நாட்டின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இஸ்லாமிய வரையறைகளைப் பேணி கழிக்குமாறும் சுற்றுலாப் பயணங்களைத் தவிர்த்து அதற்குரிய செலவை கண்டியில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இலங்கை முஸ்லிம்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

இது தொடர்பில் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் '' ஏப்ரல் விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுகின்றன. இக்கால கட்டத்தில் எம்மில் சிலர் விடுமுறையை கழிப்பதற்காக உல்லாசப் பிரயாணங்கள் மேற்கொள்கின்றனர். பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் இவ்வாறு அழைத்துச் சென்று ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. என்றாலும் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமது செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அமைய வேண்டும்.

ஆடைகள் அணிவது முதல் எமது உணவு, குடிப்பு ஆகிய யாவற்றிலும் ஹலால் ஹராம் பேணி இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், பாட்டுக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான விடயங்களை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே எமது விடுமுறை காலத்தில் உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நல்ல விடயங்களில் நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி பிற சமூகத்தவருக்கு முன்மாதிரியாக செயற்படுமாறும் சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் அண்மையில் கண்டிப் பகுதியில் நடந்து முடிந்த கலவரத்தை கவனத்திற் கொள்ளும் எவரும் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளமாட்டார்கள் என நம்புகின்றோம். அந்தப் பிரயாணத்துக்குச் செலவாகும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சிறிய அசம்பாவிதங்கள் இம்முறையும் ஏற்படுமாயின் அது பெரும் பூதாகரமாகவே ஆகிவிடும் என அறிவித்துக் கொள்கின்றோம். ஆதலால் விடுமுறைப் பயணத்தை புறம் தள்ளிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்யலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்றுதான் இது ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற வகையில் தமிழர்களும் சிங்களவர்களும் மாத்திரமன்றி ஏனைய இன மக்களும் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கின்றனர்.  அந்த வகையில் முஸ்லிம்களும் நாட்டின் இன மத நல்லுறவை மையப்படுத்தி பல பகுதிகளிலும் தமிழ் சிங்கள மக்களோடு இணைந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதுடன் அவற்றில் பங்கெடுக்கவும் செய்கின்றனர். இது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இதுவிடயத்திலும் இஸ்லாமிய மார்க்க வரையறைகளைப் பேணிக் கொள்வது அவசியமாகும்.

இந்த புத்தாண்டு விடுமுறை தினங்களில் மேற்படி ஆலோசனைகளை நாம் அனைவரும் கடைப்பிடிப்பது சிறந்ததாகும்.

(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

No comments

Powered by Blogger.