செவ்விளநீர் விற்பனை சூடுப்பிடித்துள்ளது
பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் செவ்விளநீரின் விலையும் இம்முறை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு 70 - 80 ரூபா வரையில் விற்பனையான செவ்விளநீர் தற்போது 130 150 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த வாரம் வடக்கு முழுவதிலும் மாலை நேரங்களில் மழை கொட்டித் தீர்த்திருந்தது. இருப்பினும் வழமை போன்று மார்ச் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இப்போதே ஆரம்பமாகி விட்டது. யாழ்ப்பாணத்தின் வெப்பநிலை சராசரியாக தற்போது 28 பாகை செல்சியஸ் வரையில் உள்ளது. வெப்பத்துக்கு இதமான இயற்கைப் பானமான செவ்விளநீர் விற்பனையும் அதிகரித்துள்ளது.
ஒரு செவ்விளநீரின் விலை 130, 150 ரூபா வரையில் உள்ளது. அதற்குக் குறைவான விலையில் இல்லை. கடந்த ஆண்டு 70, 80 ரூபா வரையில் விற்பனையான செவ்விளநீர் விலை எகிறியதற்கு வரட்சியே காரணம் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
வரட்சி காரணமாக உள்ளூர் (யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு) இளநீர் கிடைப்பதில்லை. குருநாகலிலிருந்தே கொண்டு வரப்படுகின்றது. அங்கும் விலை அதிகம். வாகனங்களில் எடுத்து வந்து எங்களுக்குத் தருகின்றார்கள். 100 – 110 ரூபாவுக்குத்தான் வழங்குகின்றார்கள். அதற்குக் குறைந்த விலையில் இல்லை. நாங்கள் லாபம் வைத்து விற்கின்றோம். ஒரு நாளைக்கு சராசரியாக 150, 200 இளநீர் வரையில் விற்பனையாகின்றது’ என்று வியாபாரி ஒருவர் குறிப்பிட்டார்.
Post a Comment