"ரணிலுக்கு எதிரான பிரேரணைக்கு என்ன நடந்தாலும், நாடு மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது"
“கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது காத்தான்குடி மக்களின் தேவைகள் - அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் - மும்மொழிவுகளையும் வழங்கியிருந்தோம். நாங்கள் வழங்கிய சகல வாக்குறுதிகளும் எதிர்வரும் மூன்று வருடங்கில் நிறைவேற்றப்படும்” - என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை என்ன நடந்தாலும் நாடு மிகவும் மோசமான பொருளாதார, அரசியல் சூழ்நிலையில் உள்ளது. எனவே, அதனை ஸ்தீரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 10 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி நகர சபை செயலாளர் றிப்கா சபீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியான கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கௌரவ அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, காத்தான்குடி நகர சபையின் தலைவராக எஸ்.எச்.எம்.அஸ்பர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதோடு, எம்.ஐ.எம்.ஜெஸீம் பிரதித் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பின்னர், அங்கு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“ கடந்த தேர்தலின் போது காத்தான்குடி மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதாலேயே எம்மால் 10 வட்டாரங்களையும் வெற்றி கொள்ள முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்ட 345 உள்ளுராட்சி சபைகளில் சகல வட்டாரங்களையும் கைப்பற்றி முழுமையாக வெற்றிபெற்ற ஒரோ ஒரு சபை காத்தான்குடி நகர சபை மாத்திரமே.
இந்த புதிய தேர்தல் சட்டத்துக்கு அமைய வெற்றி பெற்ற கட்சிக்கே சபையின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்தீரமான சபையொன்றினை அமைத்துக் கொள்ள முடியாதுள்ளது.
இந்த சட்டம் மக்களது பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு சட்டம் அல்ல. இந்த சட்டமூலத்தை கொண்டு வரும்போதே நாங்கள் எதிர்த்தோம். சட்ட மூலத்தில் உள்ள குறைபாடுகளினால் தேர்தலின் பின்னர் மோசமான விளைவுகள் ஏற்படும் என நாங்கள் தேர்தல் காலங்களில் குறிப்பிட்டிருந்தோம்.
காத்தான்குடி நகர சபையில் நாங்கள் ஒரு தொகுதியை இழந்திருந்தாலும் இன்று எம்மால் உறுதியான சபையொன்றை அமைத்திருக்கவோ, இது போன்ற நிகழ்வொன்றை நடத்தியிருக்கவோ முடிந்திருக்காது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித பிரச்சினைகளுமின்றி கூடியுள்ள சபை காத்தான்குடி நகர சபை மாத்திரமே. ஏனைய 12 சபைகளும் சில பிரச்சினைகளால் இதுவரை கூட்டப்படவில்லை.
அரசியல் ரீதியாக நாங்கள் மிக முக்கியமான கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை என்ன நடந்தாலும் பல்வேறுபட்ட அரசியல் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகளுக்கும் நாங்கள் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் மீண்டும் இந்த நாட்டிலே ஏற்படாத வகையில் அரசியல் சூழ்நிலைகள், ஸ்தீரமான ஆட்சி இந்த நாட்டிலே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
கடந்த தேர்தல் காலங்களில் எமது மக்களின் தேவைகள் - அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் - மும்மொழிவுகளையும் வழங்கியிருந்தோம். நாங்கள் எவற்றையெல்லாம் செய்வதாக வாக்குறுதி வழங்கினோமோ அவை அனைத்தையும் அல்லாஹ்வின் உதவியோடு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக இந்த மண்ணிலே நிறைவேற்றி ஒரு புதிய யுகத்தை நோக்கி இந்த மண்ணை நகர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். அதற்கான ஒத்துழைப்புக்களை ஆளுனர் உள்ளிட்ட அனைவரும் வழங்க வேண்டும் என கோட்டுக்கொள்கின்றேன். – என்றார்.
காத்தான் குடிகள் கெளரவக் குடிகள்!
ReplyDeleteதலைமைக்குக் கட்டுப்படுவதிலும்
ஒற்றுமையாய் ஓரணி இருப்பதிலும்
உலகுக்கே சிறந்த முன்னுதாரணம்!!
நீதிப்படையின் போராளிக் குடிகளே
வாழ்க.... வளர்க.... வாழ விடுக....!!!