டுபாயில் செய்த தவறுக்காகவே, உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார் - பூஜித் ஜயசுந்தர
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் ஊடகவியலாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது, அவர் அந்த நாட்டில் இழைத்த தவறுக்காகவே என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்காரணமாக உதயங்க வீரதுங்கவை இந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு சர்வதேச பொலிஸாரின் அபுதாபி மத்திய நிலையம் விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்றும் எம்மால் அழுத்தங்கள் பிரயோகிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த விடயத்தில் அந்த நாட்டு சட்டத்திட்டத்திற்கு அமைவாகவே எம்மால் செயற்பட முடியும் என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும் இலங்கையில் நடைபெறுகின்ற பாரிய விசாரணை ஒன்றிற்காக உதயங்க வீரதுங்க அவசியம் என்பதை எமது தரப்பால் சர்வதேச பொலிஸாரின் அபுதாபி மத்திய நிலையத்திற்கு எடுத்துக் கூறப்படும் என்று பொலிஸ் மா அதிபர் கூறினார்.
உதயங்க வீரதுங்க ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக இருந்த போது அவரின் செயற்பாடுகள் குறித்தே தமது விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு மற்றும் விசாரணைகளின் அடுத்த நடவடிக்கைகளுக்காக அவரை இங்கு கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினார்.
இதேவேளை இதன்போது உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறும் போது, டுபாயில் கைதான ஒரு நபரை இலங்கைக்கு கொண்டு வருவதை விட சிங்கப்பூரில் கைதான நபரை கொண்டு வருவது இலகுவான விடயம் என்று கூறினார்.
கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக சிங்கப்பூரில் இருக்கின்ற ஒருவரை நாட்டுக்கு கொண்டு வருவது இலகுவானது என்றும் அவர் கூறினார்.
Post a Comment