கல்முனை மாநகரசபையும், அதன் எதிர்காலமும்..
கல்முனை மாநகரசபை தனது புதிய உள்ளூராட்சி செயற்பாட்டினை ஆரம்பித்து இருக்கின்றது, இந்த வகையில் மாநகரிற்கான புதிய மேயராக சட்டத்தரணி றக்கீப் அவர்கள் SLMC சார்பாகவும், காத்தமுத்து கணேஷ் அவர்கள் TULF சார்பாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் ,இருவருக்கும் வாழ்த்துக்கள்.
..புதிய அத்தியாயம்..
இதுவரை காலமுப் SLMC யின் ஏக கட்டுப்பாட்டில் இருந்த மாநகர சபையும் அதன் பதவிகளும் இம்முறை ,என்றுமில்லாதவாறு மிகப்பிரயத்தனத்திற்கும், அச்சத்திற்கும் மத்தியில் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றது. ஆனாலும் பிரதி மேயர் பதவி ஒரு தமிழ் சகோதரருக்கு வழங்கப்படடது தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இவ் விட்டுக் கொடுப்பானது நீண்டகால ஆட்சியாளர்கள் விட்ட பிழைகளுக்கான பிராயச்சித்தமாகவும் இம்முறை அமைந்துள்ளது எனலாம்.
ஒரு மாநகரில் வாழுகின்ற அனைத்து இனங்களின் பங்குபற்றுதலுடன் அதன் நிர்வாகம் இடம்பெறுவதே அதன் ஆட்சிக்கான சிறப்பு என்பதோடு, இதுவரைகாலமும் தமிழ்சகோதரர்ளால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கான தீர்வாகவும் இது அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
இன்னும், ஆனந்த சங்கரி ஐயாவின் தலைமையில் இயங்கும் த.வி.கூ. கட்சி நீண்டகால அரசியல் வரலாற்றையும், சங்கரி ஐயாவின் அனுபவங்கள் அவரது உறுப்பினர்களின் செயற்பாடுகளின் ஊடாக சிறந்த இன ஒற்றுமையையும், அபிவிருத்தியையும் கல்முனைக்கு எதிர்காலத்தில் வழங்குவதற்கான வாய்ப்பாகவும் இதனை நோக்க முடியும். அதனையே சங்கரி ஐயா அவர்கள் தமது தேர்தல் பிரசாரங்களிலும் முன்வைத்திருந்தார்.
...எதிர்கால செயற்பாடுகள்....
இதுவரை ஒருகட்சி ஒரு இனம்,சார்பான பிரதான பதவிகள் காணப்பட்ட நிலையில் இடம்பெறாமல் தவற விடப்பட்ட பல நல்ல நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெற வேண்டும் என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகும், நீண்டகாலமாக கல்முனையில் தமிழர்,முஸ்லிம் இருதரப்பினாலும் முன்வைக்கப்பட்டுவரும் "இனமுரண்பாட்டு " கண்ணோக்கில் நோக்கப்படும் எல்லைப் பிரிப்புக்கள், உள்ளூராட்சி பரிபாலனம், அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் இந்தக்காலப்பகுதியில் சுமூகமாக தீர்க்கப்பட இவ் இணைந்த செயற்பாடு உதவலாம், அதே போல் கடந்த கால மாநகர நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக இடம்பெற்றுவரும் அதிகாரப் பிரிப்பு தொடர்பான விடயங்களிலும் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள இது உதவலாம்.
புதிய தேர்த்தல் முறையும் ஒற்றுமையும்..
புதிய உள்ளூராட்சித்தேர்தல்முறை கட்சிகளின் "நீண்டகால பகைமைகளை "மக்களிடையே குறைப்தற்கான ஒரு தீர்வை வெளிப்படுத்தி உள்ளதை பொதுவாக அவதானிக்க முடிகின்றது, குறிப்பாக கிழக்கில்,
உ+மாக.. தமிழர்களை பெரும்பான்மை கொண்ட காரைதீவு PS ல் தவிசாளர் தமிழராகவும், பிரதி முஸ்லிமாகவும்,
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சம்மாந்துறையில் தவிசாளர் முஸ்லிம், பிரதி தமிழர்..
இவ்வாறு பல புதிய இன ஒற்றுமைக்கானதும், கட்சிகளின் இணைப்புக்கானதுமான அத்தியாயங்களை இத்தேர்தல் முறை கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமே ஆகும்
உ+மாக கல்முனை மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் அ.இ.மு.கா. தனது தேர்தல்கால எதிரியான மு கா.வுடன் இணைந்து விட்டுக்கொடுத்து, ஒற்றுமையாக செயற்பட்டமை.
ஆனாலும் இதே அரசியல்வாதிகளாலேயே தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக இன ஒற்றுமை சிதைக்கப்பட்டு வருவதும் உண்மை, அது எதிர்காலத்தில் தவிர்க்கப்பட்டு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க இவ் இணைப்புக்கள் தொடர்ந்தும் உதவ வேண்டும்.
எனவே தான் இலங்கையில் உள்ள மாநகர உள்ளூராட்சிகளில் அபிவிருத்தியிலும், நிர்வாகச் செயற்பாடுகளிலும், மோசமான நிலையில் காணப்படும் கல்முனை மாநகர சபை பல்வேறு எதிர்காலச் சவால்களை எதிர் நோக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது ,எனவேதான் அரசியல் வாதிகளும் பொது மக்களும் தேவையற்ற பிரச்சினைகளை முன்வைப்பதை விட்டு விட்டு தமது முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க முன்வர வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகும்.
-முபிஸால் அபூபக்கர்-
Post a Comment