முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாளர்களை, விடுவிக்க தீவிர முயற்சி
கண்டி மாவட்டமெங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளின்போது முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தி தீ வைத்தமை தொடர்பில் 32 பேரை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கைதான, குண்டசாலை பிரதேச சபைக்கு இம்முறை பொதுஜன பெரமுன சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினரான அரலிய வசந்த எனப்படும் குமார மொஹட்டிகே சமந்த பெரேரா உள்ளிட்ட 8 பேர், கலவரங்களின் பின்னணியில் இருந்த பிரதான சூத்திரதாரி எனப்படும் மஹசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேர், வன்முறை தொடர்பில் புதிதாக நேற்று மன்றில் ஆஜர் செய்யப்பட்ட எட்டு பேர் உள்ளிட்ட 32 சந்தேக நபர்களையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய தீதிவான் எம்.எச். பரிக்டீன் உத்தரவிட்டார்.
2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிகள், தண்டனை சட்டக் கோவையின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவ்விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நீதிவானுக்கு அறிவித்த நிலையிலேயே நீதிவான் சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்தார்.
நேற்றைய தினம் விசாரணைகள் ஆரம்பமானபோது, அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமித் வீரசிங்கவும் பல்லேகலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய 23 பேரும் மன்றுக்கு சிறைக்காவலர்களால் அழைத்து வரப்பட்டனர். அத்துடன் நேற்று புதிதாக மேலும் 8 பேரும் பொலிஸாரால் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைகள் ஆரம்பமானபோது, சந்தேக நபர்களின் உறவினர்கள் பெருமளவானோர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடியிருந்தனர். பின்னர் சந்தேக நபர்கள் விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்கள் கதறி அழுததையும் அவதானிக்க முடிந்தது.
வழக்கு விசாரணைகளின் போது, கடந்த தவணையில் சந்தேக நபர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கூறி அவரை விடுதலை செய்ய முயற்சிக்கப்பட்ட போது, அது தொடர்பில் நீதிவான் மருத்துவ அறிக்கையினைக் கோரியிருந்தார். நேற்று அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதாகவும் அதில் அவர் மனநலம் குன்றியவர் அல்ல என்பது தெளிவான நிலையில், அவரை விடுவிக்க நீதிவான் மறுப்புத் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் பேசவல்ல சட்டத்தரணி சரூக் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று முச்சக்கர வண்டியொன்றினை விடுவித்துக்கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதற்கு பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான அமானுல்லா மற்றும் முனீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அந்த முச்சக்கர வண்டியை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெறும் நிலையில் அதனை உரிமையாளருக்கு விடுவிப்பது விசாரணைகளைப் பாதிக்கும் என அவர்கள் நீதிவானுக்கு அறிவிக்கவே நீதிவான் முச்சக்கர வண்டியை விடுவிப்பதை நிராகரித்துள்ளார்.
எவ்வாறாயினும் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அமித் வீரசிங்கவை சமூக ஆர்வலராக சித்திரித்ததுடன், அவரை பொலிஸார் திட்டமிட்டு இதில் சிக்கவைத்து மோசமாக செயற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
எனினும் கண்டி இனவாத வன்முறைகளின் பின்னணியில் உள்ள பிரதான சந்தேக நபரை சமூக ஆர்வலராக சித்திரிப்பதை பாதிக்கப்பட்ட தரப்பு கண்டித்துள்ளது.
இந் நிலையிலேயே வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக விசாரணைகளுக்கு காலஅவகாசம் அளித்து சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் மே 2 ஆம் திகதிவரை நீதிவான் நீடித்துள்ளார்.
-vidivelli
Yahapalanaya will release and even pay the compensation to them.
ReplyDelete