என் காலில் விழுந்த டிலான் பெரேரா, என்னை காலாவதியான நூடில்ஸ் என்கிறார் - சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்தை உடைப்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகலயில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் மகிந்த ராஜபக்சவின் கையாட்களால் திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டவர்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள 16 உறுப்பினர்களுடன் இணையவுள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டிலான் பெரேரா மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லாதவர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, என்னுடைய காலத்தில் காலில் விழுந்து தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்றவர் டிலான் பெரேரா எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற பின்னர் வேறு யாரோ போடும் தாளத்திற்கு அவர் நடனமாடுகின்றார். ஒரு காலத்தில் என்னை மிகச்சிறந்த அரசியல்வாதி என வர்ணித்த அவர் தற்போது என்னை காலவதியான நூடில்ஸ் என வர்ணிக்கின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காலாவதியான நூடில்ஸ்கள் என வர்ணிக்கப்படுபவர்கள் பத்து பேர் இணைந்தால் உலகையே தலைகீழாக மாற்றிவிட முடியும் எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
16 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினாலும் தேசிய அரசாங்கம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment