Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, எழுச்சியின் தொடராகவே மே தினம் பிற்போடப்பட்டது - ஜோசப் ஸ்டாலின்

(மீள்பார்வை)

மூன்று பௌத்த பீடங்களினதும் மகா நாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே மே தினத்தை தள்ளிப் போடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என இலங்கை ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

இந்த முடிவுக்கு எதிரான மனுவொன்றை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பிலுள்ள சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தில் (ILO) கையளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் கருத்து வெளியிடும் போது பெரும்பான்மை பௌத்த அழுத்தக் குழுக்களின் (Buddhist Lobby Group) அழுத்தம் காரணமாகவே அமைச்சரவையில் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த முடிவின் மூலமாக நீண்ட காலமாகப் பேணப்படும் ஒரு பாரம்பரியம், மூன்று பீடங்களினதும் வேண்டுகோளுக்காக மீறப்பட்டுள்ளது. சிறுபான்மையினத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட தீவிரவாத பௌத்த மதகுருக்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளினை மேற்கொண்டவர்களின் எழுச்சியின் தொடராகவே இந்த முடிவை எடுத்துள்ளது.  வெசாக் வாரத்துக்குள் மேதினம் அமைவதாலேயே மேதினம் 07 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.  வெசாக் தினம் மே தினத்துக்கு இரு தினங்களுக்கு முன்னரான 29 ஆம் திகதியே நிர்ணயிக்கப்பட்டுள்ளதேயன்றி வெசாக் வாரம் என்ற ஒன்று இலங்கையின் மரபில் இல்லை. வெசாக் தினத்திலும் வெசாக் நிகழ்வுகள் மாலை அல்லது இரவு வேளைகளிலேயே அனுஷ்டிக்கப்படுகின்றன. மே தின நிகழ்வுகள் இவற்றுக்குப் பாதிப்பாக அமையப் போவதில்லை. பெரும்பாலும் இந்துக்களாகவுள்ள தோட்டத் தொழிலாளர்களும் வெசாக்கை அனுஷ்டிப்பதில்லை.

இந்த நிலையில் பௌத்த மதகுருமார்களின் கோரிக்கைக்கு செவிதாழ்த்துவதற்கென்றே இம்முறை தொழிலாளர்களின் தினத்தில் அரசாங்கம் கைவைத்துள்ளது. எனவே தொழிற்சங்கங்களின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தொழிலாளர் தினத்தில் தமது தொழிற்சங்க செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கும் வகையில் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தைக் கேட்டுக் கொள்கிறோம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.