கொழும்பில் சூடு பிடிக்கும், அரசியல் சந்திப்புகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் இன்று (24) மாலை அவசரமாகக் கூடவிருப்பதாக அலரி மாளிகை வட்டாரம் தெரிவித்தது. இன்றைய அரசியல் நிலைமைகள் புதிய அமைச்சரவை நியமனம், கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இன்றைய கூட்டத்தில் ஆராயப் படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசைத் தொடர்வதற்காக அடுத்து எடுக்கப்படவிருக்கும் திட்டங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவை மாற்றம் குறித்த கட்சியின் முன்னெடுப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படவிருப்பதாகவும் கூறப்பட்டது.
அமைச்சரவை மாற்றம், அரசாங்கத்தின் அடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரை யாடவும், புதிய உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச உயர் மட்டம் தயார்நிலையிலிருப்பதாகவும் ஜனாதிபதியினுடனான சந்திப்புக்குரிய அழைப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் கல்வியமைச்சரும் ஐ. தே. க. பிரதிச் செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் நேற்றுத் தெரிவித்தார்.
அதேசமயம் இன்று நடைபெறும் கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் பல முக்கிய முடிவுகள் எட்டப்படவிருப்பதாகவும் அந்த முடிவுகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி அங்கீகாரம் பெறப்படு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்விதமிருக்க அரசுடன் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தரப்பு நல்லாட்சியை தொடர்வதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டருக்கும் நிலையில் அமைச்சுப் பதவிகள், செயற்றிட்டங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவிருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் நேற்று முன்தினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்வாங்கி கோரிக்கை கடிதமொன்றை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய மாநாட்டை நிறைவுசெய்து கொண்டதன் பின்னர் நேற்றுக்காலை நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் இரு தரப்பினருடனும் கலந்துரையாடவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று இரவு ஜனாதிபதியுடனான முக்கிய சந்திப்புகள் இடம்பெறலாமென அரசியல் வட்டாரம் தெரிவித்தது.
இதன்போது அமைச்சரவை மாற்றம் அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் புதிய வேலைத்திட்டங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படலாமெனவும் அறிய வருகின்றது.
இதேவேளை, மே மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் போது கூட்டு எதிரணி அரசை கவிழ்க்க திட்டமிட்டு வருவது குறித்தும் அதனை முறியடிப்பது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
எம்.ஏ.எம். நிலாம்
Post a Comment