லசித் மாலிங்கவை பழிவாங்கியுள்ளார்கள் - ரஞ்சன் ராமநாயக்க
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் லசித் மாலிங்கவை பழிவாங்கியதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மாதிவளையில் இன்று -23- நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால அந்த பதவியில் இருக்க தகுதியில்லை. அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நான் கிரிக்கெட் பற்றி பேசியது தற்போதை தலைவர் மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் பற்றி அல்ல என திலங்க சுமதிபால கூறியுள்ளார். அது உண்மைக்கு புறம்பானது.
நான் இருக்கும், இருந்த அனைவரது ஊழல்கள் பற்றியே கூறினேன். தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோருக்கு எதிராக அதிகமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
நான் கோபத்திலோ அல்லது பகை காரணமாவோ இதனை கூறவில்லை. நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன். எனக்கு பின்னால், கிரிக்கெட் வீரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் இருக்கின்றனர்.
திருடர்கள் பற்றி கூறி, திருடர்களை பிடிப்பதே எனது பணி. அதில் நான் தோற்று போவேனா இல்லையா என்பதை வரலாறு தீர்மானிக்கும். திருடர்களுடன் படுத்துறங்கி, திருடர்களுடன் இணைந்து திருடுவதை விட திருடர்கள் பற்றி கண்டறிந்து தோல்வியடைவது சிறந்தது. திருடர்களுடன் போராடி தோற்பது பெருமை. இந்த போராட்டமும் தோல்வியடையலாம். எனினும் நான் எனது போராட்டத்தை தொடர்வேன்.
விளையாட்டு சட்டத்திற்கு அமைய திலங்க சுமதிபால, கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை பதவியை வகிக்க உரிமையில்லை. திலங்க சுமதிபால ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். இதற்கு மேலதிகமாக அவர் விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்கிறார்.
பந்தயம் பிடிப்பவர்கள் விளையாட்டு சட்டத்திற்கு முரணானவர்கள். அமைச்சர் தயாசிறி ஜயசேகர என்ன இலாபம் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. அவர்தான் திலங்க சுமதிபாலவை தலைமை நற்காலியில் அமர செய்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருந்தது. தற்போது 8 முதல் 9 வது இடத்தில் உள்ளது. தயாசிறி ஜயசேகர அமைச்சராகவும் திலங்க சுமதிபால தலைவராக இருக்கும் காலத்தில் இது நடந்தது. வெட்கம் இருந்தால், மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டார்.
ஐ.சீ.சி. இலங்கை கிரிக்கெட்டின் ஊழல் குறித்து விசாரணை நடத்தியது. என்னிடமும் விசாரித்தனர். நானும் எனக்கு தெரிந்தவற்றை கூறினேன். கடந்த காலத்தில் தோல்வியடைந்ததாக கூறி லசித் மாலிங்க பழிவாங்கப்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஊடவியலாளர்கள் இது பற்றி பேசவில்லை என்றால் அதிலும் ஏதோ இருக்கின்றது.
நான் 12 ஊடகவியலாளர்களின் பெயர்களை கூறுகிறேன். இவர்கள் எப்படி கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டனர் என்பதும் தெரியும். ஒரு கட்டுரைக்கு 7 ஆயிரத்து 500 ரூபா பெற்ற ஊடகவியலாளர்கள். பெயர் விபரங்கள் உள்ள நான்கு ஊடகவியலாளர்கள் தமது பெயர்களை கூறவேண்டாம் என்று கெஞ்சினர். சிறிய கொள்ளை பெரிய கொள்ளை என்று இரண்டு உள்ளன. நான் சிறிய கொள்ளைகளின் பின்னால் செல்ல மாட்டேன்.
நான் இன்று தனியாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துகிறேன் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவேன். பல சிறந்த தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதனால், நியாயமான முறையில் திலங்க சுமதிபால கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக இதனை கூறுகிறேன். கிரிக்கெட்டை சாப்பிட்டது போதும். தற்போது விலகி வேறு ஒருவருக்கு வாய்ப்பை கொடுங்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment