3 கட்சிகளுடன் இணைந்து, ஓட்டமாவடியில் ஆட்சியை பிடித்த மயில்
ஓட்டமாவடி பிரதேச சபைகுட்பட்ட பகுதியில் வாழும் மூவின மக்களுக்கும் சமநோக்கோடு சேவை இடம்பெறும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஓட்டமாவடி பிரதேசத்தில் தங்களால் கல்வி, காணி விடயம் தொடர்பில் தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கப்பட்டது. அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு வேறுபாடுகளின்றி சமநோக்கோடு கூடிய அக்கறை செலுத்துவோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐ.ரி.அஸ்மி தவிசாளராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் உதுமாலெவ்வை அகமது லெவ்வை உதவித் தவிசாளராகவும்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து பல வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
எனவே எமது ஆட்சிக்கு உதவி புரிந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கும், கட்சி உறுப்பினர்களும் நன்றி கடன்பட்டவனாக இருக்கின்றேன் என்றார்.
Post a Comment