நல்லாட்சியை 2020 வரை, இழுத்துச்செல்ல இணக்கம்
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை கூடி பேசியுள்ளனர்.
மேற்படி கூட்டம் அலரி மாளிகையில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்தித்து பேசுவதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுத்து நீக்க வேண்டுமென ஆட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்ததுடன் அவர்கள் எமது கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என்பதால் ஜனாதிபதி இது தொடர்பில் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நல்லாட்சி அரசாங்கத்தை 2020 வரை கொண்டு செல்ல இணங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்ததுடன், கட்சியின் மறுசீரமைப்பு கட்சியை கட்டுக்கோப்புடன் கொண்டு செல்வதற்கேயாகும் எனக்குறிப்பிட்டார்.
மேலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தனிப்பட்ட விருப்புக்கு அப்பால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஒற்றுமையாகச் செயற்பட்டது போல் தொடர்ந்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இதேவேளை கட்சி மறுசீரமைப்பு சகலரினதும் கருத்துக்களை உள்வாங்கியும் மறுசீரமைப்புக் குழுவின் விடயங்களை உள்வாங்கியும் மேற்கொள்ளப்படுமென பிரதமர் குறிப்பிட்டதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தவிர ஏனைய அனைத்துப் பதவிகளுக்கான நியமனங்களும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் அதற்குப் பின் அந்த அனைத்து நியமனங்களும் இரத்துச் செய்யப்பட்டவையாகக் கருதப்படும் எனவும் காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் புனரமைப்பு பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழுவும் நிறைவேற்று சபையும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின் கட்சியின் தலைவர் பதவியைத் தவிர ஏனைய பதவிகளுக்கு யார் யாரை நியமிப்பது என்பது பற்றி தீர்க்கமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவற்றில் பெரும்பான்மையான முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் பற்றி ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படுமெனவும் அமைச்சர் கயந்த தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களின் விசேட குழுவும் நிறைவேற்று சபையும் தலைவர் பதவியைத் தவிர ஏனைய பதவிகளுக்கான நியமனங்கள் பற்றி பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கட்சியின் தலைவர் பதவியிலும் மாற்றம் செய்யவேண்டுமா இல்லையா என்பது பற்றியும் ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment