நன்றி கூறிய ரணில், வயிறு குலுங்க சிரித்த மஹிந்த - 2 வருடங்கள் தீர்க்கமானவை என்கிறார் சஜித்
”பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடைச் செய்து, நாம் வெற்றியடைந்தமை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு பெரிய ஊக்க சக்தியாக அமைந்ததென குறிப்பிட்ட கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, இந்த ஊக்க சக்தியைத் தொடர்ச்சியாக தக்கவைத்து கொள்ளவேண்டும்.
அத்துடன் எதிர்வரும் 2 வருடங்கள் தீர்க்கமானவை என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழுக்கூட்டம், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நடைபெற்றது. அதன்பின்னர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பல சந்திப்புகள் இடம்பெற்றன. அதிலொரு சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“தற்போதைய சூழ்நிலையில், இதனைவிடவும் பலமிக்கதோர் ஊடகப் பிரசாரம் நமக்குத் தேவை. எதிர்வரும் இரண்டு வருடங்களில் மக்களுக்கு நிவாரணம், இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு, நாட்டுக்கு மிகவேகமான அபிவிருத்தி ஆகியவை தொடர்பிலான திட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸாவின் அந்த யோசனைகளுக்கு பிரதமர் உள்ளிட்டோர் அங்கிகாரமளித்துள்ளனர்.
அவ்விடத்திலிருந்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ” உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமக்கு கிடைத்த சக்தியை, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, தனக்குத் தானே குழிவெட்டிக்கொண்டது” என்றார்.
இதன்போது கருத்துரைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ கட்சியை உடனடியாக மறுசீமைக்கவேண்டும். அதேபோல, மக்களுக்கு நேரடியான அழுத்தங்களைக் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைத் தீர்ப்பதற்கு வழிசமைக்கவேண்டும்” என்றார்.
அந்தச் சந்திப்புகளில் பங்கேற்றிருந்த அமைச்சர் தயா கமகே, “ நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்த 14 நாட்களில், விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு விட்டதன் ஊடாக, உங்களுக்கு இருக்கும் பலத்தையும், உங்கள் மீதான நம்பிக்கையையும் நாட்டுக்கு காண்பித்து விட்டீர்கள். எனினும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஒத்திவைத்து, உடலை பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சித்தது” எனக் கூறியுள்ளார்.
“இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக, சுதந்திரக் கட்சியானது முடிந்துவிட்டது. தாமரை மொட்டு கருகிவிட்டது. ஐ.தே.க விழித்துக்கொண்டது. இதில், பிரதமருக்கும் மற்றும் ஐ.தே.கவுக்கு, கண்ணை மூடிக்கொண்டு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது” என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“நல்லது, நல்லது, பேதங்களை மறந்து கட்சி மற்றும் அரசாங்கத்துக்காக சகலரும் இதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டீர்கள். அதனால்தான் இவ்வாறு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ளமுடிந்தது” என இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.
“சகல இனங்களும், சகல மதங்களும், அனைத்து சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்தியோரும் உங்களுக்கு ஆதரவாகவே இந்தவிடயத்தில் இருந்தனர் என சஜித் பிரேமதாஸ குறிப்பிடும்போது, அதனை நவீன் திஸாநாயக்க ஆமோதித்தார்.
“ கெஹலிய, கம்பன்பில மற்றும் நாமல் ஆகியோரை, அன்றையதினம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்தே சந்தித்து, நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தமைக்கான நன்றியறிதலை தெரிவித்தேன். அப்போது அவ்விடத்தில் மஹிந்த ராஜபக்ஷவும் இருந்தார். நன்றிக்கடனுக்காக, கம்பன்பிலவுக்கும் விமலுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன் எனத் தெரிவித்தேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
அப்போது அவ்விடத்திலிருந்த மஹிந்த ராஜபக்ஷ, வயிறு குலுங்க, குலுங்க சிரித்துவிட்டார் என பிரதமர் தெரிவிக்கையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் கெக்கென சிரித்துவிட்டனர்.
“நாங்கள் ஏதோ பணம் கொடுத்துதான் வெற்றிகொண்டோமென, இல்லை சேர், தோல்வியடைந்ததன் பின்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனரே” என அமைச்சர் தயா கமகே, பிரதமரிடம் கேட்டுவிட்டார்.
குறுக்கிட்ட சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், மஹிந்தவுக்கு களவாக, “சல்லி டீல்” போட்டுள்ளனர் என்ற கதையும் அடிபடுகின்றது. என்றாலும் நாங்கள் (ஐ.தே.கவினர்) கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர்கள் என “ கோவா தரப்பினர்” தற்போது தெரிவிக்கின்றனராம் என்றார்.
“ ஐக்கிய தேசியக் கட்சியினால் உருவாக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற குழந்தையை நாங்கள், தாலாட்டுவோம் என்றுதான் பசில் ராஜபக்ஷ எதிர்பார்த்திருந்தார். அதன் ஊடாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே, கைகலப்பு ஏற்பட்டு, முரண்பாடுகள் ஏற்படவேண்டுமென பசில் எதிர்பார்த்திருந்தார். இதுவே தனக்கு கிடைத்த தகவலாகுமென, அவ்விடத்திலிருந்த ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.
குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாங்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுமாறு கூட்டமைப்பினர் கோருகின்றனர்”.
அதற்கு மேலதிகமாக, பிரச்சினையில் உள்ள காணி விவகாரத்தை பார்க்குமாறு கோருகின்றனர். வடக்கில் அபிவிருத்திகள் தற்போதைவிடவும் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்படவேண்டுமென கோருகின்றனர். குற்றச்சாட்டுகள் இன்றி, தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வழக்குத்தாக்கல் செய்து குற்றவாளிகளாயின் தண்டனை வழக்குமாறும், குற்றமற்றவர்களாயின் விடுதலை செய்யுமாறு கோருகின்றனர்” இவையாவும் சாதாரண கோரிக்கைதானே என்றார். அவற்றை சகலரும் அமோதித்தனர்.
அதுமட்டுமன்றி, தொழில்கள் இன்றி இருக்கின்ற தமிழர்களுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென அங்கிருந்தவர்கள் கோரியுள்ளனர். அதனை ஆமோதிக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையை அசைத்துள்ளார்.
சிறிகொத்தாவில் அன்று இடம்பெற்ற சந்திப்புகளில் எல்லாம், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்துரைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம, தான் கையொப்பம் இட்டுள்ளேனா என ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, காதர் மஸ்தான் எம்.பி, சுசில் பிரேமஜயந்தவுக்கு கயிறு கொடுத்துவிட்டார் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களும் அளவளாவப்பட்டன என்றும் உள்வீட்டுத் தகவல் தெரிவிக்கின்றது.
-அழகன் கனகராஜ்
Post a Comment