150 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ தங்கம், கடலில் பிடிபட்டது (படங்கள்)
வடக்கில் பெருமளவு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவை விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கமாக இருக்கலாம் என்று சுங்கத் திணைகக்களப் பேச்சாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வடக்கு கடலில் தங்க கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா கடற்படை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், மன்னார் கடலில் நேற்றுமுன்தினம் மாலை 24.2 கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
படகு ஒன்றில், கொண்டு செல்லப்பட்ட போது தலா 100 கிராம் எடையுள்ள 242 தங்க கட்டிகளை சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு 150 மில்லியன் ரூபாவாகும்.
படகில் இருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளுடன் இவர்கள் யாழ்ப்பாணத்தில் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சுனில் ஜெயரத்ன, சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான தங்கம், போரின் இறுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதில் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை சிறிலங்காவில் மலிவாக கிடைக்கும் தங்கத்தை, இந்தியாவுக்கு கடத்திச் செல்வதற்கு முயற்சிப்பது வழக்கமே என்றும், இந்தக் கடத்தலில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும், கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மன்னாரைச் சேர்ந்தவர்களே என்றும் சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசநாயக்க கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் தங்கம் கைப்பற்றப்பட்டது இது தான் முதல்தடவையல்ல என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment