தேர்தலில் போட்டியிட்டதற்காக வெட்கப்படுவதாககூறி, தன்னைதானே செருப்பால் அடித்த வேட்பாளர்
இலங்கை கம்னியூஸ்ட் கட்சியில் போட்டியிட்டதற்கு தான் வெட்கப்படுவதாக தெரிவித்து நபர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சி போட்டியிட்டது.
இந்த கட்சியில் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு போனஸ் பட்டியலில் இருந்த வேட்பாளர் ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் ஏ.பி. கணபதிபிள்ளை முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்யவிருந்த நிகழ்வில் அதே கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இடையூறு விளைவித்துள்ளனர்.
இந்த பதவி பிரமாண நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் ஹட்டன் கிருஷ்ணபவான் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவிருந்தது.
எனினும், இந்நிகழ்வுக்கு இடையூறு செய்தமையால் வேறு ஒரு இடத்தில் சத்தியபிரமாணம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சி சார்பில் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு ஹட்டனில் சிலர் வேட்பாளராக போட்டியிட்டார்கள்.
அதில் போட்டியிட்டவர்கள் அணைவரும் 200ற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றதனால் அக்கட்சிக்கு ஒரு பட்டியல் ஆசனம் கிடைக்கபெற்றது.
இதற்கு அக்கட்சியில் போனஸ் பட்டியல் வேட்பாளருக்கு அந்த கட்சியின் உயர்மட்ட குழு ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு ஆசனத்தை வழங்கியுள்ளது.
எனினும், இதில் நேரடியாக போட்டியிட்டவர்களுக்கு ஆசனம் கிடைக்கவில்லையெனவும், இன்று இடம்பெறுகின்ற சத்தியபிரமாணம் நிகழ்வுக்கு அழைப்புவிடுக்கவில்லையெனவும், குறித்த பட்டியல் வேட்பாளர் தேர்தலின் பொழுது எவ்விதமான செயற்பாடுகளும் செய்யவில்லை.
ஆகவே இவருக்கு இந்த பதவி வழங்க கூடாது என தெரிவித்தே இந்த இடையூறை விளைவித்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை கம்னியூஸ்ட் கட்சியில் நேரடியாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரிடம் வினவியபோது,
இம்முறை தேர்தலில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சி இலங்கையில் எந்தவொரு இடத்திலும் ஆசனம் பெற்றுக்கொள்ளாத நிலையில் ஹட்டன் டிக்கோயா நகர சபையில் போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.
இந்த ஆசனம் நேரடியாக களத்தில் போட்டியிட்ட தம்மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அளித்த வாக்குகள் மூலமாகவே இந்த ஆசனம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அப்படியாயின் மக்கள் நம்பிக்கை கொண்ட எமக்கு இந்த ஆசனத்தை வழங்காமல் போனஸ் பட்டியலில் இருந்த வேட்பாளருக்கு வழங்கியது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
குறித்த பட்டியல் வேட்பாளர் ஆசனத்தை பெற்றுக்கொண்டு பெருங்கட்சிகளுக்கு பணத்திற்கு விலை போவதாகவும் தெரிவித்து அவர் இலங்கை கம்னியூஸ்ட் கட்சியில் போட்டியிட்டதற்கு தான் வெட்கப்படுவதாக தெரிவித்து செருப்பால் அடித்துக்கொள்வதாக தெரிவித்து அவர் தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்டார்.
இது தொடர்பாக இலங்கை கம்னியூஸ்ட் கட்சி போனஸ் பட்டியல் வேட்பாளரிடம் வினவியபோது,
நேரடியாக போட்டியிட்டவர்கள் கட்சியில் உறுப்பினர்கள் அல்லர். எந்த கட்சியிலும் இவர்களுக்கு வேட்பாளர்களுக்கான இடம் கொடுக்காத நிலையில் தான் அதை இந்த கட்சியில் பெற்றுக்கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் வட்டார ரீதியில் போட்டியிட்டு வெற்றிப்பெறவில்லை. ஆகவே இந்த பட்டியலில் ஊடாக கிடைத்த ஆசனத்தை பெறவேண்டும் என அவர்கள் முயற்சி செய்தார்கள். அது அவர்களுக்கு பலனளிக்கவில்லை.
இதனாலேயே இன்று நடைபெறவிருந்த சத்தியபிரமாணம் நிகழ்வை குழப்ப வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு சிலர் தடுத்தார்கள்.
ஆனால் நாங்கள் அங்கிருந்து வெளியே சென்று வேறு ஒரு இடத்தில் வைத்து சத்தியபிரமாணம் செய்துக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment