இன்னும் எத்தனை காலம் நாங்கள், வாய்களை மூடிக்கொண்டிருப்பது..? ஹரீன் ஆவேசம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க போவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் எங்களது போராட்டத்தை கட்சிக்குள் மேற்கொள்வோம். நாங்கள் எமது கட்சியின் தலைவரிடம் கோர வேண்டிய அனைத்தையும் கோரியுள்ளோம். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் எமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
ஒரே தட்டில் சாப்பிட்டு விட்டு தமது நலனுக்காக மறுபக்கம் திரும்பும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டுக்கு எதிராக நாங்கள் கட்டாயம் குரல் கொடுப்போம்.
எமது அரசியல் நாற்காலிகளில் இல்லை. இதயங்களில் எமது அரசியல் இருக்கின்றது. அத்துடன் இது கொள்கை இல்லாத அரசியல்வாதிகள் உள்ள நாடு. நாட்டை பார்க்கும் எமக்கு பெயரிய கவலை ஏற்படுகிறது.
அதேபோல் ஒன்றை கூற வேண்டும், ஐக்கிய தேசியக் கட்சியை எப்போதும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க முயற்சித்தாலும் நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மாற்றங்களை ஆரம்பித்த மாவட்டம் பதுளை. எம்மை தாக்க வந்தே அவர்கள் இலக்கை தவறவிடுகின்றனர்.
எமது அமைச்சு பதவிகளை பறித்துக்கொண்டால் பரவாயில்லை. அதன் பலாபலன்களை விரைவில் காண முடியும். இதற்கு முன்னரும் இப்படி நடந்துள்ளது.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை முன்வைத்த பின்னர் பல்வேறு நபர்கள் விளையாட்டுக்களை ஆடி வருகின்றனர். அந்த விளையாட்டுக்கள் மூலம் ஐக்கிய தேசியக்கட்சியை வீழ்த்த முயற்சிக்கின்றனர்.
இன்னும் எத்தனை காலம் வாய்களை மூடிக்கொண்டிருக்க முடியும் என்ற கேள்வி எமக்குள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாங்கள் வெற்றி பெற்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த எவருக்கும் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியாது. அமைச்சர்களாக பதவி வகிக்கவும் கூடாது எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment