Header Ads



ரணிலுக்கு எதிராக தடுமாறுகிறது சு.க.

-பா.நிரோஸ்-

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவேறுபட்ட கொள்கைகளைக் கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தான் கடுமையாக எதிர்ப்பதாக, மார்ச் மாதம் 19ஆம் திகதியன்று, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து​கொண்டிருந்த, சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பீ. திஸாநாயக்க, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பது கடினமானது என்றார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அல்லாத அரசாங்கமொன்றை அமைப்பதற்கு, சகல கட்சிகளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுக்கின்றது என்றனர்.

அத்துடன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சுதந்திரக் கட்சி எதிர்க்கமுடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா என, ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சரமாரியாகக் கேட்கப்பட்ட கேள்விகளை நிராகரித், அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க,

“நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான இயலுமை இல்லை” என்றார்.  “எனினும், இந்த விவகாரம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இறுதியான உத்தியோகபூர்வமான தீர்மானம் எதனையும் இதுவரையிலும் எடுக்கவில்லை” என்றும் எஸ்.பீ, தெரிவித்தார்.

எது எவ்வாறாக இருப்பினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களுக்கு, சுதந்திரக் கட்சி இணங்குகின்றது எனத் தெரிவித்த எஸ்.பீ, மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில், சுதந்திரக் கட்சியே கடுமையாக விமர்சனம் செய்தது என்றார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்தப் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்யவேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியினர் வலியுறுத்தியுள்ள​மை குறித்து பதிலளித்த எஸ்.பீ.திஸாநாயக்க, “அவ்வாறான​தொரு தேவையில்லை” என்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணம் என்னவென கேட்கப்பட்ட கேள்விக்கு, ” அது தொடர்பில் அவரிடமே கேளுங்கள்” என்றார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. அரசாங்கத்துக்கோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கோ எதிராக மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டுவரப்படவில்லை” என்றும் எஸ்.பீ. திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

வடக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், தெற்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பனவற்றைக் கருத்தில் கொண்டும், நாட்டில் புதிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பில், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் 4ஆம் திகதி காலையில் ஒன்றுகூடி இறுதி தீர்மானத்தை எட்டவுள்ளனர்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபாலவிடம், ”பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆதரிப்பீர்களா” என ஊடகவியலாளர்கள் மீண்டும், மீண்டும் கேட்டபோது,

“எதிர்க்கவா சொல்கின்றீர்கள்”, “எதிர்க்கவா சொல்கின்றீர்கள்” என மீண்டும் மீண்டும் பதிலளித்தார். அப்படியாயின், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இரகசிய வாக்கெடுப்பு நடத்தமுடியுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பி​ரேரணைகளின் மீது மட்டுமே, இரகசியவாக்கெடுப்பு நடத்தமுடியும். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென, யாராவது கோரிக்கை விடுவார்களாயின், அக்கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதற்கான முடிவின் பிரகாரமே அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லமுடியும் என்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னம், ‘கை’ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.