அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம், கேட்பதாக, பாராளுமன்ற உறுப்பினரின் வீடு முற்றுகை
வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம் கேட்பதாகவும் அவரை இடமாற்றம் செய்ய கோரியும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீட்டை நேற்று (23) முற்றுகையிட்டுள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாவற்குளம் படிவும் 1 கிராமத்தை சேர்ந்த மக்கள், அக்கிராமத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக் கோரி நேற்று (23) மாலை 4.00 மணியளவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு சென்று முறையிட்டுள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாவற்குளம் படிவம் 1 கிராமத்தின் அபிவிருத்தி சங்கத் தலைவர் அச்சுதன் அலெக்ஸ் தலைமையில் சென்ற கிராம மக்கள், கிராமத்தில் திட்டமிட்ட முறையில் அரச கொடுப்பனவுகள் கிராம உத்தியோகத்தரால் மறுக்கப்படுவதாகவும் கிரமத்தில் செய்யப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தரால் உதவித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டுமானால் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் சுட்டிக்காட்டினர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக விளக்கமாக கேட்டறிந்துகொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இப்பிரச்சனை தொடர்பாக செட்டிக்குளம் பிரதேச செயலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் உடனடியாக பாவற்குளம் படிவம் 1 கிராமத்தை சேர்ந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு பணித்துள்ளார்.
எதிர்வரும் நாளைமறுநாள் (26) வவுனியாவில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இப்பிரச்சனையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கிராம மக்களிடம் உறுதியளித்திருந்தார்.
Post a Comment