Header Ads



வெளிநாடுகளில் மரணிக்கும் இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பு


வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இன்று விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் உறவினர்கள் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அல்லது இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கு தேவையான அடையாள ஆவணங்கள், சத்தியக்கடதாசிகள் மற்றும் ஏனைய ஆவணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதனை இயலுமாக்கும் புதிய முறைமையொன்றை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவானது உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரையிலும், மரணித்த நபரின் உறவினர்கள் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது வெளிநாட்டில் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதனை அங்கீகரிப்பதற்காக குறித்த ஆவணங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கவேண்டியிருந்தது.

புதிய முறைமையின் கீழ், மரணித்த நபரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க முடிவதுடன், அவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இந்த திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து பிரதேச செயலாளர்களையும் அறிவுறுத்தும் வகையிலான சுற்றுநிரூபம் ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

மரணித்த நபரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கொழும்பிலுள்ள கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு அல்லது யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்திற்கு பிரயாணங்களை மேற்கொள்ளாது, அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் அவற்றை செயற்படுத்திக்கொள்வதனை இந்த புதிய முறைமை இயலுமாக்குகின்றது.

மரணம் வாயிலான இழப்பான தருணமொன்றில் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திற்கு நீண்ட பிரயாணங்களை மேற்கொள்வதனையும், தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் செலவீனங்களையும் தவிர்க்கும் முகமாக, இந்த புதிய ஏற்பாட்டினால் குறிப்பாக வெளிப்பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் நன்மைகளை அடைந்துகொள்ள முடியும்.

இந்த திட்டமானது, பொது மக்களுக்கு ஒருமுகப்படுத்தப்பட்டதும், பரவலாக்கப்பட்டதும், மேம்படுத்தப்பட்டதுமான கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்கான வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முயற்சிகளின் ஒரு பாகமாகும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.