ஒரே மோட்டார் சைக்கிளில், சென்ற மூவர் பலி
குருணாகல், தும்மலசூரிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் மூவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
இன்று (25) நள்ளிரவு கடந்து 12.30 மணியளவில், மாதம்பை - குளியாபிட்டி வீதியில், குளியாபிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, அதே திசையில் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயற்சித்த வேளையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அதிக வேகத்தில் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிளின் இடது பக்க கண்ணாடி, மற்றைய மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்தவரின் கைகளில் பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி, வீதியின் வலது புறமாக இருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிளில் 19 வயதுடைய இருவர், 18 வயது நபர் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதோடு, மூவருமே பலத்த காயத்திற்குள்ளாகி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
விபத்தில் குருணாகல், உடுபெத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த புத்திமால், தனபால, இசிர ஆகிய மூவர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்கத்கது.
சடலங்கள், குளியாபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகள் இன்று (25) இடம்பெறும் என தும்மலசூரிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment