Header Ads



மாளிகாவத்தை நிப்ராஸ் கொலை, வெளியாகும் புதுத் தகவல்கள்


மாளிகாவத்தை - அல்லாமா இக்பால் மாவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்ட  31 வயதுடைய நிப்பு என அறியப்படும் சாவுல் ஹமீட் மொஹம்மட் நிப்ராஸின் கொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  

அதன்படி இந்த கொலையானது டுபாயில் இருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளமைகான தகவல்களை விசாரணையாளர்கள் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.  

கொலைசெய்யப்பட்ட நிப்புவுக்கு இறுதியாக டுபாயில் இருந்து வந்துள்ள தொலைத்தொடர்பு இலக்கம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 அச்சுறுத்தல்கள் காரணமாக நிப்பு, மாளிகாவத்தையை விட்டு வெளியேறி வரக்காப்பொல பகுதியில் இருந்தவாறு அவ்வப்போது மாளிகாவத்தைக்கு வந்து  ............................ வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், கொலை இடம்பெற்ற தினம் டுபாயில் இருந்து பாதாள உலக தலைவர்களில் ஒருவரான கஞ்சிபான இப்ராஹீம் என்பவரே நிப்புவுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரின் அழைப்பின் பிரகாரமே முச்சக்கர வண்டியில் வரக்காப்பொலயில் இருந்து அவர் மாளிகாவத்தைக்கு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

இந் நிலையிலேயே மாளிகாவத்தையில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கஞ்சிபான இப்ராஹீம் டுபாயில் தற்போது உள்ள நிலையில், டுபாயில் இருந்து இத்தாலி சென்றுள்ள  மாகந்துரே மதூஷின் நெருங்கிய சகா என பொலிஸார் கூரும் நிலையில், வாழைத்தோட்டம் பகுதியில் வர்த்தகர் றிஸ்வானின் கொலைக்கும், நிப்புவின் கொலைக்கும் தொடர்புகள் இருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந் நிலையில் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் குறித்து கொழும்பு மத்தி பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த  பணாமல்தென்பியவின் கீழும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர்   நிசாந்த சொய்சாவின் கீழ்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   

மாளிகாவத்தை அல்லாமா இக்பால் மாவத்தையில்  கடந்த செவ்வாயன்று  இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

நிப்பு எனப்படும் குறித்த இளைஞர்  துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதிக்கு முச்சக்கர வண்டியிலேயே வந்துள்ள நிலையில், அவர் திட்டமிட்டு அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

அதன்படி முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவ்விடயம் உண்மையென கண்டறியப்பட்டது.  நிப்புவுடன் முச்சக்கர வண்டியில், சிராஜ் எனும் மற்றொரு இளைஞரும் வந்துள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் அவர் சிறு காயத்துடன் தப்பியிருந்தார். அவரை தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்துள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்ட நிப்பு, இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் வெள்ளை வேனில் நுவரெலியாவில் வைத்து கடத்தப்பட்ட மஞ்சன் அக்ரம் எனப்படும் பாதாள உலக உறுப்பினரின்  மனைவியின் சகோதரன்   என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந் நிலையிலேயே சந்தேக நபர்களைக் கைதுசெய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.