Header Ads



முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்


கண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தெல்தெனிய அம்பாலை பிரதேசத்தைச் சேர்ந்த குமாரசிங்க எனும் இளைஞர், கடந்த பெப்ரவரி 22ம் திகதி குடிபோதையில் இருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அவரது மரணத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரம் காரணமாக சுமார் 900 கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புலனாய்வுப் பிரிவு பொலிசார், குமாரசிங்க உயிரிழந்த விடயத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் நிலவுவதை கண்டறிந்துள்ளனர்.

குடிபோதையில் இருந்தவர்களால் தாக்கப்பட்டிருந்த நிலையிலும், குறித்த இளைஞனுக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு பாரதூரமான காயங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்று தெல்தெனிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்த குமாரசிங்க ஆரம்ப சிகிச்சையைப் பெற்ற தெல்தெனிய மருத்துவமனையில் இருந்தவரை தனது வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவையே அவர் உட்கொண்டுள்ளார். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் இயல்பாக பேசி கலகலப்பாகவே காணப்பட்டுள்ளார்.

ஆனாலும் அவர் உயிரிழப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக திடீரென கண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குமாரசிங்க, கடுமையாக நோய்வாய்ப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அதே நேரம் அவரது மரணத்துக்கு முன்னரே மார்ச் 03ம் திகதி முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து திட்டமிடப்பட்டு திகதி குறிக்கப்பட்டதாக வன்முறைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த விடயங்களுக்கு மேலதிகமாக முக்கியமான சாட்சியமொன்றும் பொலிசாரின் விசாரணையில் சிக்கியுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் தற்போது புலனாய்வுப் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1 comment:

  1. Please find out the truth and reveal to the Public.

    ReplyDelete

Powered by Blogger.