பெற்றோரைத் தேடும் குழந்தைகள்
குழந்தைகள் இல்லாத நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் 2010 ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது இரண்டு மாத குழந்தையாக இருந்த இரட்டையர்களான ஆண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். தற்போது அந்த சிறுவர்கள் தமிழ் பெண்மணியான தமது தாயாரை சந்திக்க பெரும் ஆவலாக உள்ளனர். அதற்கான முயற்சியில் அந்த நெதர்லாந்து தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.
தருச லக்மால், ஹிருச ஜயமால் என்று அழைக்கப்படும் அந்த இரு சிறுவர்களுக்கும் தற்போது எட்டு வயதாகிறது. அவர்கள் இருவரும் நெதர்லாந்தில் தற்போது கல்வி கற்கின்றனர்.
அவர்களை தத்தெடுத்த தாய் (ஜெயந்தி) இலங்கை பிரஜையாவார். அவருக்கு தற்போது 36 வயதாகிறது. அவரும் சிறிய வயதில் நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினால் 1981 இல் தத்தெடுக்கப்பட்டவராவார். பின்னர் அவர் தனது இலங்கை தாயாரை ஹிங்கிரிய பிரதேசத்தில் 2010 ஆம் ஆண்டு தேடிக் கண்டுபிடித்துள்ளார். அந்த மகிழ்ச்சி தான் தத்தெடுத்த பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாகும். தனது கணவருடன் இணைந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தத்தெடுத்த தாயின் (ஜெயந்தி) தற்போதைய பெயர் (Jenny Rabeli nk) , அவரது நெதர்லாந்து கணவரின்
பெயர் (Stefan Zielhuis) ஆகும். இவர்கள் இருவரும் சட்ட ரீதியான முறையில் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் உள்ளன.
அந்த இரு சிறுவர்களையும் பெற்றெடுத்த தாயார் ஒரு தமிழ் பெண்ணவார். தியாகராஜ் ஸ்ரீதேவி என்ற பெயருடைய குறித்த பெண் நீர்கொழும்பு கொச்சிக்கடை, வைக்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓட்டுத் தொழிற்சாலையில் (சுதந்தி என்ற பெயர் உடைய ஓட்டுத் தொழிற்சாலை) தொழில் செய்யும்போது இந்த இரண்டு குழந்தைகளையும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுள்ளார்.
பின்னர் அந்த குழந்தைகளை புத்தளம் பிரதேசத்தில் உள்ள மீகலாவே சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் ஒப்படைத்துள்ளார். அங்கு ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சிறுவர் திணைக்களத்தின் ஊடாக நெதர்லாந்து தம்பதியினர் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்ட ரீதியாக தத்தெடுத்து தமது நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தியாகராஜ் ஸ்ரீதேவி என்ற பெயருடைய பெண் குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தருச லக்மால், ஹிருச ஜயமால் ஆகியோர் தம்மை பெற்றெடுத்த தாயாரை சந்திக்க ஆவலாக உள்ளனர். ஆயினும் அவரது நிழற்படம் கூட அவர்களிடம் கிடையாது. தாயின் பெயரை மாத்திரமே அறிந்து வைத்துள்ளனர்.
Post a Comment