இது எத்தகைய, பாராதூரமானது தெரியுமா..?
திகன ஹிஜ்ரா மஸ்ஜிதுக்குள் விஷேட அதிரடிப்படைகள் பாதணிகளுடன் சென்று வணக்க வழிபாடுகளில் இருந்த மக்களை அடித்து விரட்டிவிட்டு, அங்கிருந்த ஆலிம்கள் இருவரை தாக்கி அவர்கள் கையில் ஆயதங்களை திணித்து வெளியில் அடித்து அடித்து அழைத்து வந்து கைது செய்ய எத்தனித்த நடவடிக்கை எத்தகைய பாரதூரமான முன்னுதாரணம் என்பதனை சன்மார்க்கத் தலைமைத்துவம் மஸ்ஜித் நிர்வாகங்கள் இன்னுமின்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும்!
அதேபோன்றே அவர்களைக் கண்டு அனுதாபப்பட்டு அவர்களுக்காக அதிகாரிகளுடன் கதைத்து அவர்களைப் பொறுப்பேற்று மஸ்ஜிதில் கொண்டுவந்து விட்ட மதகுருவின் செயலையும் சமாதான சகவாழ்வின் முக்கியத்துவத்தையும் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்ந்து தம்மை ஒழுங்கு படுத்திக் கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்.
சிங்கள மொழிப் புலமையுள்ள, ஏனைய சமூகங்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகுகின்ற சமாதான சகவாழ்வின் முன்னோடியாக திகழ்கின்ற மலையகத்தின் பொக்கிஷங்களில் ஒருவராக கருதப் படுகின்ற மௌலவி சதகதுல்லாஹ் அவர்கள் மீதான இனவெறிக் காடையர்களின் தாக்குதல் உணர்த்தும் பாடம் என்ன என்பதனை உலமாக்கள் மற்றும் அறிவு ஜீவிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மஸ்ஜிதுகளையும், உலமாக்களையும், மதரசாக்களையும் ஆலிம் மாணவர்களையும் பாதுகாக்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும், அதேவேளை சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களை துறைசார் நிபுணர்களை கல்விமான்களை சமூக ஆர்வலர்களை மதிக்கின்ற அங்கீகரிக்கின்ற அழகிய மரபை ஆலிம்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் கடைப் பிடித்தால் மாத்திரமே ஊர்மட்ட (ஷூரா) ஆலோசனை சபைகளை வெற்றிகரமாக அமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுத்தளங்களில் விமர்சிக்கப் படும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கிறது, ஒருசில பிரபலங்களின் சாணக்கியமற்ற சமயோசிதமற்ற குறுகிய மனப்பான்மைகளுடன் கூடிய முடிவுகளை நடவடிக்கைகளை நிகழ்ச்சி நிரல்களை முன்வைத்து சகல உலமாக்களையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையும் விமர்சிக்கின்றமை தவிர்க்கப் படுதல் கட்டாயமாகும்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து காலத்திற்கேற்ற உணர்ச்சிப் பிரவாகங்களிற்கு அப்பால்பட்ட வழிகாட்டல்களை வழங்கக் கூடிய விதத்தில் தரமான குத்பாக்கள் நடத்தப் படுவதனை மஸ்ஜித் நிர்வாகங்கள் மாத்திரமன்றி ஒவ்வொரு ஊரிலும் உள்ள புத்திஜீவிகள் உறுதி செய்தல் வேண்டும், அது ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் மஸ்ஜித்களை ஹயத்தாக்குவதன் பேரில் உலமாக்கள் சர்ச்சைக்குரிய விடயங்களை எடுத்துக் கொண்டு முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்துகின்ற வான்பிளக்கும் (ஒலிபெருக்கிப்) பீறங்கிப் பேச்சுக்களை தவிர்த்துக் கொள்வதோடு, சகல பதின்ம வயதினரையும் இளைஞர்களையும் ஆழமான ஆன்மீக ஆன்மீகப் பயிற்சிகளூடாக கட்டுக் கோப்புடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வழிகாட்டுதல் வேண்டும்.
-Inamullah Masihudeen-
உண்மையிலும் உண்மை .
ReplyDelete