Header Ads



பெஷன் ஆக மாறிவிட்ட, ஒன்றுபட வேண்டும் என்ற கோஷம்

ஒன்றுபட வேண்டும் என்ற கோஷம் ஒரு ஃபெஷன் ஆக மாறி விட்டது. ஒற்றுமை என்பது வரைவிலக்கணங்களற்ற ஒரு கலைச்சொல்லாக பரவலாக புழக்கத்தில் இருக்கின்றது.

சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பேசுகின்ற அனைவரும் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோஷத்தைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலை இருக்கின்றது.

அந்தக் கோஷத்தை பொதுவெளியில் பயன்படுத்தாவிட்டால் ஒருவரது சமூகப் பணியானது பெறுமானங்கள் அற்றுப் போய்விடுகின்றது, என்ற செயற்கைத் தோற்றப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே ஒற்றுமை என்பது இன்றைய சூழலில் வெறுமனே ஒரு வெற்றுக் கோஷமாக மாறியிருக்கின்றது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒற்றுமை என்பது ஓர் இலக்கா? அல்லது ஓர் இலக்கை அடைவதற்கான வழிமுறையா? என்ற கேள்விக்குக் கூட தெளிவான பதிலில்லை. அனைத்துமே இடம்மாறிப் போன இந்த சமூகத்தில் இலக்குகளும் வழிமுறைகளும் இடம்மாறியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்லவே!

முஸ்லிம் சமூகம் ஒற்றுமையில்லாத சமூகம் என்று யார் சொன்னது?!

எத்தனை விடயங்கள் இந்த சமூகத்தை ஒற்றுமைப்படுத்துகின்றன என்பதை கொஞ்சம் தனியே இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு திருமணம் ஓர் ஊரை ஒன்று சேர்க்கின்றது.

ஒரு ஜனாஸா ஓர் ஊரை ஒன்று சேர்க்கின்றது.

ஒரு விருந்து ஒரு பிரதேசத்தை ஒன்று சேர்க்கின்றது.

ஒரு சுனாமி இந்த முழு சமூகத்தையும் ஒன்று சேர்க்கின்றது.

சுருங்கச் சொன்னால் ஒரு சந்தோஷம் அல்லது ஒரு கவலை, வேறொரு வார்த்தையில் சொன்னால் ஓர் இலாபம் அல்லது ஒரு நஷ்டம் சமூகத்தை ஏதோ ஒரு வகையில் ஒன்று சேர்க்கின்றது.

வெறுமனே ஒரு சாதாரண உணர்ச்சிக்கு சமூகத்தை ஒன்று சேர்க்கும் சக்தி இருக்கின்றதென்றால், ஓர் இலக்குக்கு, அல்லது ஒரு திட்டத்துக்கு அந்த சக்தி இல்லை என்று நினைக்கிறீர்களா?!

அப்படியல்ல!!!

எமது பிரச்சினை என்னவென்றால், இலக்குகளோ அல்லது திட்டங்களோ இல்லை என்பதுதான்.

வெறும் ஒரு சர்க்கரைத் துளி எறும்புகளையெல்லாம் ஒன்று சேர்த்து விடுகின்றது. வெறும் ஓர் அழுகிய உணவுப் பண்டம் ஏரியாவில் உள்ள காகங்களையெல்லாம் ஒன்று சேர்த்து விடுகின்றது.

ஒன்று சேர்ப்பதற்கு ஏதாவதொன்று வேண்டும் நண்பர்களே! 

ஒன்றுமே இல்லாமல் ஒன்று சேர்ந்து என்ன செய்ய வேண்டியிருக்கின்றது?!

இந்த சமூகத்தைக் கரை சேர்ப்பதற்கு, இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு, இந்த மக்களைப் பாதுகாப்பதற்கு, உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு எம்மில் யாரிடமாவது ஏதாவது உருப்படியான திட்டங்கள் இருக்கின்றனவா?!

‘அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இருக்கின்றன’ என்று மொட்டையாகச் சொல்லாதீர்கள்.

அந்த அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் ஒளியில் நின்று நவீன காலத்துக்கேற்ற வழிகாட்டல்களையும், பாதைகளையும் காட்டித் தரக்கூடிய எத்தனை திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன?!

‘எம்மிடம் திட்டம் இருக்கின்றது’ என்று சொல்கின்றவர்கள், உங்களுடைய திட்டங்களை பொதுவெளிக்குக் கொண்டு வாருங்கள். மூடிய நான்கு சுவர்களுக்குள் இருக்கின்ற திட்டங்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் தான் என்ன?!

அந்தத் திட்டங்கள் வெளியே வந்தால்தான் அவற்றில் எது காலப்பொருத்தமானதும், நடைமுறைச் சாத்தியமானதும், எதிர்கால விளைவுகளைத் தரக்கூடியதாகவும் இருக்கின்றது என்பதைப் பார்த்து அதனை நடைமுறைப்படுத்துவதில் அனைவரும் ஒன்று சேர முடியும்.

அப்படியான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தத்தான் ஒற்றுமை தேவையே அல்லாமல், வேறொன்றுக்கும் ஒற்றுமை அவசியமில்லை. 

செய்வதற்கு ஒன்றுமில்லாமல் ஒற்றுமைப்பட்டு ஆக வேண்டியது என்னதான் இருக்கின்றது என்று யாராவது சொல்லுங்களேன்!

ஒன்றுசேர்ப்பதற்கு எதுவும் இல்லாவிட்டால் பிரிந்திருப்பதைத் தவிர வேறு வழிதான் என்ன?!

இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும், முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும், இந்த உம்மத் ஒன்று சேர வேண்டும், என்ற கோஷங்கள் யாவும் மிகவும் அழகான கோஷங்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் ஒன்று அழகாக இருப்பதால் அது சரியானதாக இருக்கும் என்று நினைக்கின்ற இடத்தில்தான் நாம் பிழை விடுகிறோம்.

ஒன்று சேர்வது என்பதன் அர்த்தம் ஒரு நோக்கத்தோடு செயற்படுவதே அல்லாமல், லேபல்களை மாற்றிக் கொள்வதோ அல்லது சீனி போத்தலில் உப்பு போத்தல் என்று எழுதி ஒட்டி விடுவதோ அல்ல.

ஒரு நோக்கத்தோடு செயற்படும் போதுதான் இன்னொருவன் விழுந்தால் தூக்கி நிறுத்தி விடும் மனது வரும். பல நோக்கங்களோடு செயற்படும் போது முன்னால் நடப்பவனை வீழ்த்தி விட்டு, தான் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தான் வரும்.

ஒன்றுபட வேண்டும் என்ற கோஷத்தைக் கொண்டு போய் ஓர் ஓரமாக வைத்துவிட்டு, சமூகத்தை முன்னகர்த்திச் செல்வதற்கான ஒரு திட்டத்தை யாராவது முடியுமானால் கொண்டு வாருங்கள். எல்லோரும் உங்களோடு ஒன்று சேர்வார்கள். அதை விட்டு விட்டு எல்லோரையும் ஒன்று சேர்த்து திட்டம் தீட்டும் முயற்சியில் நீங்கள் ஒற்றுமைக் கோஷம் போட்டுக் கொண்டிருந்தால், பெரும்பாலும் உங்களது ஜனாஸாவில்தான் அனைவரையும் ஒன்று சேர்க்க முடியுமாக இருக்கும். மையித்தை அடக்கம் செய்து விட்டு அனைவரும் கலைந்து சென்று விடுவார்கள். முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர் என்ற நற்சான்றிதழ் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

Affan Abdul Haleem

1 comment:

  1. First all Jamaths come together and next all parties come together then we can work together with a clear understanding and agenda.

    ReplyDelete

Powered by Blogger.