போதை ஏற்படுத்தும் பயங்கரம் - மாலபேயில் நடந்த சம்பவம்
கொட்டாவ பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை உடைத்து பெறுமதியான தொலைக்காட்சி மற்றும் உபகரணங்களை திருடி அவற்றை ஈடு வைத்து ஹெரோயின் புகைத்ததாகக் கூறப்படும் அந்த வீட்டு உரிமையாளரின் மகன் உட்பட மூவரை கடந்த 18 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுகளையுடைய இளைஞர்களாவார்கள். வீட்டு உரிமையாளர்களான, சந்தேக நபரின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது பிரதான சந்தேக நபர் இரு நண்பர்களுடன் சேர்ந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் கொட்டாவ பிரதேசத்திலுள்ள அடகு கடை ஒன்றில் தொலைகாட்சிப் பெட்டியை அடகு வைத்து 9,500 ரூபாவை பெற்று மாலபே, கொடெல்லா வத்த பகுதியில் ஹெரோயின் புகைத்துக் கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின், கஞ்சாவுக்கு அடிமையான இந்தச் சந்தேக நபர்கள் இதற்கு முன்னரும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களுடன் அடகு வைக்கப்பட்டிருந்த 45,000 ரூபா பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் உபகரணங்களையும் இவற்றை கொண்டு செல்லப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Post a Comment