ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பந்தை விதிமுறையை மீறி சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்துள்ளது.
இதனையடுத்து, வரவிருக்கும் 2018 ஐபிஎல் தொடரிலும் இந்த இரண்டு வீரர்களும் பங்கேற்க பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்) தடை விதித்துள்ளது.
இதேபோல், பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து பேசிய ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, '' ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒரு வருடம் தடை விதித்துள்ளது. இதனையடுத்து, நாங்களும் அவர்களை 2018 ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதித்துள்ளோம்'' என்று கூறினார்.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு பதிலாக விளையாட மாற்று வீரர்களை அந்தந்த அணிகள் தேர்வு செய்யும் என்றும் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
ஏற்கனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், சன் ரைசர்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னரும் விலகியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த போட்டிகளில் எஞ்சியுள்ள நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் பதவி விலகினர்.
வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணை தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அரசின் அமைப்பான ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தி இருந்தது.
Post a Comment