Header Ads



"பாகிஸ்தானை சகோதர நாடாக ஏற்றுக்கொள்ளுமாறு, இலங்கையிடம் கோரிக்கை"


நீண்டகாலமாக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் இருந்துவரும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி, பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு சகோதர நாடுகள் என்ற வகையில் இணைந்து பயணிக்க இரு நாடுகளின் தலைவர்களும் உறுதியளித்தனர்.

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைனுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு, இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போதே, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இஸ்லாமாபாத் நகரிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தானிய ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

தலைவர்களுக்கிடையிலான சுமுகமான சந்திப்பைத் தொடர்ந்து இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானது.

தனது உத்தியோகபூர்வ அழைப்பையேற்று, பாகிஸ்தானுக்கு வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு, தனது நன்றியைத் தெரிவித்த பாகிஸ்தானிய ஜனாதிபதி, தனது நாட்டுக்கு இது பெரும் கௌரவமாகும் எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வழங்கும் புலமைப்பரிசில்கள் மற்றும் பயிற்சி சந்தர்ப்பங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தானிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் அச்சந்தர்ப்பங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

உலக பயங்கரவாதத்துக்கெதிராக அணிசேர வேண்டியதன் அவசியம் குறித்து இரு நாடுகளினதும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடியதுடன், கடந்த யுத்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை ஜனாதிபதி பாராட்டினார்.

ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்களின் போது, இலங்கைக்காக பாகிஸ்தான் வழங்கிவரும் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி பாராட்டினார்.

இலங்கைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் உதவுவதற்கு பாகிஸ்தான் தயார் என்றும் பாகிஸ்தானை சகோதர நாடாக ஏற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் தெரிவித்த பாகிஸ்தானிய ஜனாதிபதி, அடுத்த சார்க் விழாவை பாகிஸ்தானில் நடத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் வெளிநாட்டு, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியின்  இந்தப் பயணம் உதவியுள்ளதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் முகங்கொடுக்க நேரிட்ட கவலைக்குரிய நிகழ்வுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்க, இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை பாகிஸ்தானிய ஜனாதிபதி பாராட்டினார்.

பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் பேரப்பிள்ளைகளுடன் ஜனாதிபதி புகைப்படத்திலும் தோற்றினார்.

No comments

Powered by Blogger.