"சு.க.உறுப்பினர்கள், கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைவார்கள்"
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியளித்தால் புதிய அரசாங்கம் அமைக்க வேண்டிவரும். மாறாக அது தோல்வியடைந்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகள வான உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என்று அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு எதிராக ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாயின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்காது. மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டமை, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினையும் அல்ல. ஏனெனில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியே நம்பிக்கையில்லாப் பிரேரனையில் பிரதான இடம் வகிக்கிறது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜையாவார். அதனைத் தெரிந்துகொண்டுதான் அவரை அப்பதவியில் நியமிக்குமாறு சிபாரிசு செய்தனர். அவ்வாறு நியமித்த பின்னரே பாரிய மோசடி இடம்பெற்றது. அம்மோசடி இடம்பெற்ற பின்னர் அவரைப் பாதுகாப்பதற்கு முன்நின்றவர்கள் பற்றியும் அனைவருக்கும் தெரியும்.
எனவே அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வந்து மத்திய வங்கியின் ஆளுநர் பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தவர்கள், நீதிமன்றத்தின் அழைப்புக்கு இணங்க அவரை தற்போது நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது. எனினும் அது இன்னும் நடைபெறவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதவளிப்பது தொடர்பில் கட்சியைவிட குழுக்கள் ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.ஏனெனில் மக்களே எமக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே அம்மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக நாம் பாராளுமன்றில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியளித்தால் புதிய அரசாங்கம் அமைக்க வேண்டிவரும். மாறாக அது தோல்வியடைந்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்வர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment