Header Ads



கொழும்பு மக்களுக்கான எச்சரிக்கை

“கொழும்பு மாவட்டத்தில், 2020 ஆம் ஆண்டளவில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்த நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், “நாட்டின் நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கென்று தனியான பொறிமுறையொன்று இல்லாமையே இதற்கான காரணமாகும். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்” என்றார்.

உலக நீர் தினமான நேற்று (22) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இலங்கையில் 1991ஆம் ஆண்டு தொடக்கம் “உலக நீர் தினம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நீரின் அடிப்படை இயற்கையே என்பதால் நாம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். நீர் மூலங்கள் பாதுகாப்பது அவசியம். நாட்டில் காணப்படுகின்ற ஆறுகள் மற்றும் ஆற்றுப்படுகைகளை பாதுகாப்பதற்கென ஒரு அரச நிறுவனம் இல்லாதிருப்பது ஒரு துர்ப்பாக்கிய நிலைமையாகும்” என்றார்.

மேலும், “வன ஜீவராசிகள் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட பல்வேறு அரச ஸ்தாபனங்கள், நாட்டின் நீர் நிலைகளை பாதுகாப்பதற்குரிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்குக் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பை சுமக்க வேண்டிய ஓர் அரச நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

No comments

Powered by Blogger.