நாமல் ஏன் தடுக்கப்பட்டார், அமெரிக்கா கூறும் காரணம்
தம்மிடம் செல்லுபடியாகக் கூடிய அமெரிக்க நுழைவிசைவு இருந்த போதிலும், தாம் அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
ரஷ்யா சென்றிருந்த நாமல் ராஜபக்ச, மொஸ்கோவில் இருந்து புதன்கிழமை இரவு அமெரிக்காவின் ஹொஸ்டன் நகருக்கு பயணமாகவிருந்தார். எனினும், அவரை விமானத்தில் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அமெரிக்க அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவரை பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.
இதுபற்றி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் செவ்வி அளித்துள்ள நாமல் ராஜபக்ச,
“ மொஸ்கோவில் நான், விமானம் ஏறச்சென்ற போது, அமெரிக்காவுக்குள் நுழைய என்னை அனுமதிக்கப் போவதில்லை என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளகப் பணியகத்தினால் தகவல் தரப்பட்டுள்ளதாக எனக்குக் கூறப்பட்டது. எனினும், எந்தக் காரணமும் கூறப்படவில்லை.
என்னிடம் செல்லுபடியாகக் கூடிய – பலமுறை பயணிப்பதற்கான அமெரிக்க நுழைவிசைவு உள்ளது.
அமெரிக்காவில் என் மீது எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை. நான் எனது சிறிய தாயாரின் மரணச்சடங்கில் பங்கேற்க வேண்டியிருந்தது.
என்னை தமது நாட்டுக்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கின்ற உரிமை அமெரிக்காவுக்கு உள்ளது. ஆனால் அதனை எனக்கு முன்னரே அவர்கள் தெரியப்படுத்தியிருக்க முடியும்.
அதேவேளை, நாமல் ராஜபக்சவிடம் அமெரிக்க நுழைவிசைவு இருந்த போதிலும், அதில் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனைத் தீர்க்க காலம் எடுக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியிருப்பதாக நாமல் ராஜபக்சவின் பணியக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதற்குள், நாமல் ராஜபக்சவின் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் முடிந்து விடும் என்பதால் அவர் விரைவில் நாடு திரும்ப முடிவு செய்துள்ளார் என்றும் அவரது பணியத்தைச் சேர்ந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.
Post a Comment