Header Ads



கண்டி வன்முறையுடன், எங்களுக்கு தொடர்பில்லை - மஹிந்த அணி

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, தங்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஒன்றிணைந்த எதிரணி, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தால் பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், அதையே சர்வதேச ஊடகங்களும் கூறுகின்றன எனவும் தெரிவித்துள்ளது. 

ஒன்றிணைந்த எதிரணி சார்பாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் கையெழுத்திட்டு,  அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு செய்தி முகவராண்மை ஒன்றால், அண்மையில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாகவே கவனம் செலுத்தி இவ்வறிக்கை, சட்டமும் ஒழுங்கும் அமைச்சரையும் அமைச்சரவைப் பேச்சாளரையும் மேற்கோள்காட்டியே, அச்செய்தி வெளியிடப்பட்டது எனத் தெரிவித்ததோடு, அவர்களின் கருத்துகளை நிராகரிப்பதாகவும் கூறியது. 

வன்முறைகள் தொடர்பாகத் தொடர்புடையவர் எனக் கூறப்படும், பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சமந்த பெரேரா, வன்முறையைக் கட்டுப்படுத்தவே முயன்றார் எனவும், அதற்கான ஆதாரம் உள்ளது எனவும், பெரமுன குறிப்பிடுகிறது. அதேபோல், கைதுசெய்யப்பட்ட இன்னோர் உறுப்பினரும், பொய்யான குற்றச்சாட்டின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பெரமுன தெரிவிக்கிறது. 

பொதுஜன பெரமுனவை, இவ்வன்முறைகளில் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனக் குறிப்பிட்ட அவ்வறிக்கை, மெனிகின்ன பள்ளிவாசலைத் தீயிட்டுக் கொளுத்தியதாக, பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், அப்பள்ளிவாசல் மீது தீ மூட்டப்படவில்லை எனவும், கற்களே வீசப்பட்டன எனவும் தெரிவிக்கிறது. 

சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள், அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியைச் சீர்குலைப்பதற்காகவே, இம்முரண்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன எனக் குற்றஞ்சாட்டிய பீரிஸ், 2012ஆம் ஆண்டு ஆரம்பித்து, 2014ஆம் ஆண்டில் அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, விசாரணை ஆணைக்குழுவொன்று இதுவரை அமைக்கப்படாமை ஏனெனவும் கேள்வியெழுப்பினார். 

அவ்வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள், தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியவர்களே இருக்கின்றனர் எனவும், அதன் காரணமாகவே இவ்வாறான விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை எனவும், அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. நீங்கள் முஸ்லீம்களையும் இஸ்லாத்தையும் அழிப்பதாக எண்ணிக்கொண்டு.உங்களையும் அழகிய இலங்கை தீவையுமே அழித்து கொண்டுள்ளீர்கள் என்பதே உண்மை.

    ReplyDelete
  2. ha ha ha, he is thinking everyone is not educated like him, Raja Pucksay , you and your people are culprit of the this game, you did this as soon you got majority of votes , but it is a illusion , you dream will be in disaster , wait and see , we all know you are one of the actor as well ,

    ReplyDelete

Powered by Blogger.