சவூதியை நோக்கிவந்த 7 ஏவுகணைகள் - ஒருவர் மரணம்
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனிலிருந்து சௌதி அரேபியாவின் எல்லைக்குள் ஏவிய ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சௌதியின் படைகள் தெரிவித்துள்ளன.
அதில் மூன்று ஏவுகணைகள் சௌதியின் தலைநகரான ரியாத்தை நோக்கி ஏவப்பட்டதாகவும், அதன் பாகங்கள் புறநகர்ப்பகுதியின் தரையை வந்தடைந்தபோது, அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏமனின் உள்நாட்டுப் போரில் சௌதி தலைமையிலான கூட்டணியின் தலையீட்டின் மூன்றாவது ஆண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவைக் கண்டது.
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், ரியாத்தின் சர்வதேச விமானநிலையம் உள்பட பல இடங்களை இலக்காக கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
ஹூத்திகளுக்கு இரான் ஏவுகணைகளை வழங்குவதாக சௌதி தலைமையிலான கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளதை அந்நாடு மறுத்துள்ளது.
"இரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி குழுவின் இந்த ஆக்ரோஷமான மற்றும் விரோத நடவடிக்கை, இரானிய ஆட்சியானது ஆயுத குழுவுக்கு ராணுவத் திறன்களில் ஆதரிக்கிறது என்பதை நிரூபிக்கிறது" என்று கூட்டுப்படையின் செய்தித்தொடர்பாளரான துர்க்கி அல்-மல்கி தெரிவித்துள்ளார்.
"பல பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை நகரங்களை நோக்கி செலுத்துவது என்பது ஒரு தீவிரமான வளர்ச்சி" என்று அவர் மேலும் கூறினார்.
ஏவுகணை தலைக்கு மேலே வெடித்துச் சிதறி, புகைப் பிடிப்பதைக் கண்டதாக ரியாத்தில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த சில மாதங்களில் மட்டும் டஜன்கணக்கான ஏவுகணைகளை சௌதி அரேபியாவை நோக்கி ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏமன் அரசாங்கத்திற்கு எதிராகவும், சௌதி தலைமையிலான கூட்டுப்படைக்கு எதிராகவும் போராடி வரும் இரான், தான் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதாக கூறப்படுவதை மறுக்கிறது.
சௌதி தலைமையிலான கூட்டணியின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக "சுயாதீன நடவடிக்கைகளாக" ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இரான் கூறுகிறது.
Post a Comment