4ம் திகதி இரவு 9 மணிக்கு, உண்மை நிலைமை புரியும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல. இருந்தபோதும், பிரித்தானிய பாராளுமன்ற கலாசாரத்தை பின்பற்றும் நாடு என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணையை தைரியமாக எதிர் கொண்டு வெற்றிபெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் காரணங்கள் அரசிய லமைப்பின் 81ஆவது பிரிவுக்கு அமைய ஏற்புடையதல்ல எனவும் குறிப்பிட்டார்.
கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொறுப்புக் கூறவேண்டிய கடமை 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் பிரதமர் ஒருவரை மாத்திரம் இலக்குவைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு எந்த சட்ட ஏற்பாடுகளும் இல்லை. மாறாக ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும். இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டுவரும்போது பழைய அரசியலமைப்பு செல்லுபடியாகாது. 19ஆவது திருத்தமே செல்லு படியாகும். கொள்கைவெளியீட்டுக்கு எதிராக நடந்துகொண்டமை நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டாலே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடியும்.
அது மாத்திரமன்றி பிணைமுறி விநியோக சர்ச்சை குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினால் பிரதமரோ அல்லது அமைச்சர்களோ இந்த மோசடிக்கு பொறுப்புக் கூறத்தேவை யில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி குற்றமிழைக்காதவர் என அறிவிக்கப்பட்ட நபர் மீது அதே குற்றச்சாட்டுக்களை சுமத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர அரசியலமைப்பின் 81ஆவது பிரிவின் கீழ் இடமில்லை. அத்துடன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள விடயமொன்று பற்றி விவாதிப்பது சம்பிரதாயத்துக்கு முரணானது.
இருந்தபோதும் சகல சம்பிரதாயங்களையும் மீறி, பிரித்தானிய பாராளுமன்ற கலாசாரத்தைப் பின்பற்றும் நாடு என்ற ரீதியில் எதிர்தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக விவாதித்து, இவ்விடயத்துக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். எனவே நான்காம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டு அதனை வெற்றிகொள்வோம்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் ஊடாக அரச இயந்திரத்தையும், தனியார் இயந்திரத்தையும் முடக்குவதற்கே சிலர் முயற்சிக்கின்றனர்.
அது மாத்திரமன்றி இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி வழங்கும் விடயத்தில் கடந்தகாலத்தில் உரிய சட்டங்கள் பின்பற்றப்படவில்லை. எனவேதான் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் பாரிய சட்டத்தைக் கொண்டுவந்தோம். இதனால் அதிக இலாபமீட்டியவர்கள் பலர் அவற்றைப் பெறமுடியாது போனது. 2008ஆம் ஆண்டு முதல் பலர் அதிகமான இலாபங்களை ஈட்டியுள்ள நிலையில் பிரதமரும், அரசாங்கமே சகலவற்றுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இருந்தபோதும், பிரதமரோ அல்லது அமைச்சர்களோ இதற்குப் பொறுப்பாளிகள் இல்லையென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே தற்பொழுது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையாகவே அமைகிறது.
கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என அறிவித்தே மக்கள் ஆணையைப் பெற்றிருந்தோம். இவ்வாறு பெறப்பட்ட மக்கள் ஆணைக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்புக் கூறவேண்டிய கடமை 225 பேருக்கும் உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புக்கு ஏற்புடையது என்ற போர்வையில் தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுக்காமல் இருந்திருக்க முடியும். எனினும், பிரதமர் அவ்வாறு செய்யாது விரைவில் விவாதத்துக்கு எடுக்குமாறு கூறியுள்ளார். நான்காம் திகதி இரவு 9 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தும்போது உண்மை நிலைமை புரியும் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்தார்.
மகேஸ்வரன் பிரசாத்
Post a Comment