'மஹாசொன்' ஆடிய, புலி வேட்டை (பகுதி -1)
என். சரவணன்
“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அல்ல “மஹாசொன் பலகாய” தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். சிங்கள மரபிலக்கிய அர்த்தத்தில் கூறுவதாயின் அதுவொரு “அரக்கர் சேனை” (Demon Brigade)
“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அல்ல “மஹாசொன் பலகாய” தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். சிங்கள மரபிலக்கிய அர்த்தத்தில் கூறுவதாயின் அதுவொரு “அரக்கர் சேனை” (Demon Brigade)
“மஹாசொன் பலகாய” என்கிற அமைப்பின் பெயர் முதன் முதலில் வெளியானது 2008 ஒக்டோபர் மாதமளவில் தான். அதாவது யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது.
20.10.2008 ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு சிறிய கடிதப் பொதியொன்று கிடைத்தது. ஒரேவிதமான கடிதத்தின் 50 பிரதிகள் அதில் இருந்தன. மனித உரிமைகளின் பேரால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வாதிடும் அனைவரும் கொல்லப்படுவர் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. “மஹாசொன் பலகாய” பெயரில் ஒரு அமைப்பு உரிமை கோரியது அது தான் முதன் முறை.
இந்த துண்டுப் பிரசுரம் கிடைப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஜே.சீ.வெலிஅமுனவின் வீட்டுக்கு குண்டு எறியப்பட்டது. வழக்கறிஞர்களும் சிவில் அமைப்புகளும் சேர்ந்து அந்த சம்பவத்தைக் கண்டித்து புதிய நகர மண்டபத்துக்கு அருகில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் செய்திருந்தனர். இது ஒரு இரகசிய அமைப்பாக அறியப்படுமுன்னர் இராணுவத்தின் முக்கிய கொலைப்படையாக அறிப்பட்டிருந்தது. அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்கிற அச்சம் பலர் மத்தியில் நிலவவே செய்தது. தற்போதைய “மஹாசொன்” இயக்கத்தும் மேற்படி சம்பவத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய உண்மைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இராணுவத்தில் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி (LRRP - Long Range Reconnaissance Patrol) என்கிற ஒன்றை இராணுவத்தின் சிறப்புப் படையைச் சேர்ந்த (Special Force) கேர்னல் ராஜ் விஜேசிறி 1996இல் உருவாக்கிய வேளை இந்தப்படையணிக்கு வைத்த இன்னொரு பெயர் தான் “மஹாசொன் பலகாய”. எதிர்பாராத நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும் பேயின் பெயரை அவர் வைத்தார். அன்றைய சமாதான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர்களைத் தேடிச்சென்று இரகசியமாக கொலை செய்து புலிகள் இயக்கத்தைப் பலவீனமடையச் செய்வதே தமது இலக்கு என்று கேர்னல் ராஜ் விஜேசிறி “esankalani” (3 வது இதழ் - உபாலி வெளியீடு) என்கிற பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
சரத் பொன்சேகா, அனுருத்த ரத்வத்த, ராஜ் விஜேசிறி
உலகில் இராணுவ பலம் மிக்க பல நாடுகளில் LRRP படையணியை வைத்திருப்பார்கள். அதனை "lurp" என்றும் கூட அழைப்பார்கள். இலங்கையில் நிகழ்ந்த யுத்தத்தில் முக்கிய பாத்திரத்தை இது ஆற்றியிருந்தது. வேவு பார்ப்பது, சட்டவிரோத நாசகர வேலைகளை செய்கின்ற இந்த அணி; ஒரு கொலைப்படையாகத் (killing machines) தான் அறியப்பட்டிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆழ ஊடுருவி விடுதலைப் புலிகளின் தலைவர்களை, தளபதிகளை துல்லியமாக உளவறிந்து தருணம் பார்த்து படுகொலை செய்வது இந்த அணியின் பொறுப்பு.
ஆனால் இந்த படையணி விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல சிவில் சமூகத்திலும் பலரை இலக்கு வைத்து படுகொலை செய்து வந்தது. இப்படி ஒரு படையணியை வைத்திருப்பதை இராணுவத்தில் உள்ள முக்கிய தளபதிகளைத் தவிர இராணுவத்தின் ஏனைய அங்கங்களுக்கோ ஏன் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுக்கோ கூட தெரியாதபடி இரகசியமாக இதனை இயக்கி வந்தது அரசு. 2000ஆம் ஆண்டு டிசம்பர் மிருசுவிலில் வைத்து குழந்தைகள் உள்ளிட்ட 8 பேரைக் கொன்று கிணற்றுக்குள் வீசியிருந்த சம்பவம் இந்த “மஹாசொன்” படையணியைச் சேர்ந்த ஐவரால் தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இரு வருடங்களுக்கு முன்னர் தான் அந்த விசாரணையின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு நால்வர் விடுவிக்கப்பட்டு சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவுக்கு மாத்திரம் மரணதண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம்.
புலி வேட்டை
விடுதலைப் புலிகளின் மட்டு உளவுப் பிரிவுப் பொறுப்பாளர் லெப்.கேணல் நிசாம், மட்டு அம்பாறை தொலைதொடர்புப் பொறுப்பாளர் மேஜர் மனோ, ஆர்ட்டிலறி நிபுணர் மேஜர் சத்தியசீலன், கப்டன் தேவதாசன், மட்டுமன்றி விடுதலைப் புலிகளின் வான்படைத் தளபதி கேணல் ஷங்கர், கடற்புலிகளின் தளபதி லேப்.கேணல் கங்கை அமரன் அனைவரும் இந்தப் படைபிரிவினால் தான் கொல்லப்பட்டார்கள்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மன்னாரில் கொல்லப்பட்ட கேணல் சார்ல்ஸ் கூட LRRP யின் தாக்குதலில் தான் கொல்லப்பட்டார். கேணல் சார்ல்ஸ் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் உட்பட கொழும்பில் நிகழ்ந்த முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தவர், புலிகளின் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தலைமை தாங்கியவர். அத்துடன் இலங்கை அரசுக்கு ஒரு கட்டத்தில் பொட்டு அம்மானை விட முக்கியமாக தேவைப்பட்டவர் சார்ல்ஸ்.
அது மட்டுமன்றி, அரசியல் பிரிவின் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப்பையா பரமு, தமிழ்ச்செல்வன் (இரு தடவைகள்) அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் எஸ்.தங்கன், வவுனியா சிறப்புத் தளபதி கேணல் ஜெயம், பிரதி இராணுவத் தளபதி கேணல் பால்ராஜ் ஆகியோர் LRRPயின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர்கள்.
அவர்களுடன் கிழக்கின் அரசியல் அரசியல் துறைப் பொறுப்பாளர் கேணல் கருணா, கரிகாலன், ஜிம் கெலி தாத்தா, பிராந்திய உளவுப் பிரிவுத் தலைவர் லெப்.கேணல் ரமணன் ஆகியோரும் கூட மயிரிழையில் உயிர் தப்பியவர்கள் தான்.
மில்லேனியம் சிட்டி
ஆனால் 2002 ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று இரகசிய கொலைக்கும்பலைப் பற்றிய துப்பின் பேரில் அத்துருகிரிய பகுதியில் மில்லேனியம் சிட்டியில் இருந்த இந்த LRRP படையணியை சுற்றிவளைத்தது பொலிஸ். இந்த அதிரடி நடவடிக்கைக்கு குலசிறி உடுகம்போல தலைமை தாங்கினார். பொலிசாருக்கு கூட இது அரச அங்கீகாரம் பெற்ற இரகசிய கொலைப்படை என்பது தெரியாது இருந்தது. ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது பற்றிய உண்மைகளை அறிந்திருந்த இராணுவ பிரதானிகள் அதிர்ச்சியில் இருந்தார்கள். இந்த சுற்றி வளைப்பு ஒரு துரோகமெனக் கூறினார்கள்.
பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இதுபற்றி எழுதிய கட்டுரைக்கு “மாபெரும் துரோகம்” என்று தலைப்பு வைத்தார். இராணுவத்தின் இந்த இரகசிய இல்லம் (Safe house) 80களில் ஜே.வி.பியினரை சித்திரைவதை செய்யும் இரகசிய வதை முகாமாகவும் இயங்கியது என்றும் அதுவே பின்னர் LRRPயின் இரகசிய முகாமாக இயங்கியிருக்கிறது என்றும் அந்தக் கட்டுரையில் எழுதினார்.
சம்பந்தப்பட்ட பலரது பெயர்களைக் கூட சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. இந்தப் படையணியின் தலைவராக தொழிற்பட்ட கப்டன் நிலாம் (தம்பிராசா குஹசாந்தன்) மற்றும் முன்னால் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் உளவாளிகள் பலரும் கூட கைது செய்யப்பட்டார்கள். இவர்களை விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் முதலில் தோற்றன. பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு, கைது போன்றவற்றைக் கண்டித்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவின் கட்டளையின் பேரின் அவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.
அதன் பின்னர் LRRPயைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள்; பேச்சுவார்த்தை நிகழ்ந்துகொண்டிருந்த யுத்த நிறுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். LRRP காட்டிக்கொடுக்கப்பட்டது சமாதானப் பேச்சுவார்த்தையின் விளைவே என்று இனவாத சக்திகளால் விமர்சிக்கப்பட்டது. LRRP பற்றிய விசாரணையை மேற்கொள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி LRRPயும், அதன் இராணுவ உபகரணங்களும் சட்டபூர்வமானவை தான் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் மக்கள் மத்தியில் “மில்லேனியம் சிட்டி” விவகாரம் பலமான பீதியைக் கிளப்பியிருந்தது. எனவே அன்றைய ஜனாதிபதி சந்திரிகா LRRP பற்றி விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். அந்த அணைக்குழு “குலசிறி உடுகம்பொல” உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மில்லேனியம் சிட்டி சுற்றி வளைப்பானது நாட்டுக்கு ஏற்படுத்திய மிகப் பெரும் கலங்கமும் துரோகமும் ஆகும் என்று தெரிவித்ததோடு அதற்குப் பொறுப்பான பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பட்டியலை வெளியிட்டது. அதுமட்டுமன்றி “மில்லேனியம் சிட்டி” சுற்றிவளைப்பை செய்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவை நீக்கியதுடன், கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.
சிறிய படையணியாக இருந்தும் ஈழப்போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புகளை உண்டுபண்ணிய இரகசிய படை இது. இவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியானது உலகிலேயே கடுமையான இராணுவப் பயிற்சிகளில் ஒன்று என்று “National Geography” சானல் வெளியிட்ட ஆவணப்படத்தில் (Special Forces: Sri Lanka LRP) அறிவித்தது. இதில் பணியாற்றிய படையினரின் சாவுகளையும், வெற்றிகளையும் பற்றிய வீரகாவியங்களாக பல கட்டுரைகளும், சில நூல்களும் கூட வெளியாகியுள்ளன.
அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்கு 90களின் நடுப்பகுதியில் "Green Beret" விசேட பயிற்சியைத் தொடர்ந்து ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இராணுவ தந்திரோபாயங்களின் தோல்வியைத் தொடர்ந்து LRRP போன்ற ஒன்றின் அவசியத்தை இராணுவத்துக்கு அறிவுறுத்தியது அமெரிக்கா தான். அதற்கான தீவிர பயிற்சியையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.
இந்த இணைப்பையும் கவனியுங்கள். கவனியுங்கள்
அமெரிக்கா இலங்கைப் படையினருக்கு வழங்கிய LRRP பயிற்சியின் போது
LRRP படையணிக்கு அமெரிக்கா எவ்வாறு பயிற்சிகளை அளித்து வருகிறது என்பது பற்றி சிவராம் எழுதிய விரிவான கட்டுரை (A Second Look at US Assistance to Lanka Against 'Terrorism') “டெயிலி மிரர்” பத்திரிகையில் 15.09.2004 இல் வெளியானது. ஒரு சில மாதங்களில் சிவராம் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட நிலையில் பாராளுமன்றத்துக்கருகில் (28.04.2005) சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சிவராம் கொல்லப்பட்டு சரியாக ஒரு மாதத்தின் 31.05.2005 அன்று அத்துருகிரிய பகுதியில் வைத்து LRRP யை வழிநடத்திய முக்கிய நபர் மட்டுமன்றி அந்தப்படையணியின் பிரதிக் கட்டளைத் தளபதியுமான கெப்டன் துவான் நிசாம் முத்தலிப் (Nizam Muthaliff) விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதையும் இங்கு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.
“மில்லேனியம் சிட்டி” விவகாரம் அம்பலத்துக்கு வந்ததன் பின்னர் LRRPயில் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுவந்த 80க்கும் மேற்பட்டவர்கள் வரிசையாக விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். அப்படி கொல்லப்பட்டவர்களில் சிலரின் பட்டியலை சண்டே டைம்ஸ் (25.11.2008) பத்திரிகை வெளியிட்டது. அவர்களின் பெரும்பாலானோர் தமிழர்கள்.
சிங்கள தரப்புக்கு தமது யுத்த வெற்றியில் மஹாசொன் படையணியின் பாத்திரம் பாரியது. சிங்கள மக்கள் மத்தியில் புனிதப்படுத்தப்பட்ட அந்த பெயரை தொடர்ந்தும் தாங்கி நிற்பதில் என்ன ஆச்சரியம் உண்டு. தொடரும்
Very good article, thanks for publication.
ReplyDelete