மகிந்த என்றால் என்ன..? ராஜிதவின் விளக்கம் இது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் தொடர்பான விடயத்தில் ஒரு தரப்பினர் மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களும் ஏமாந்துள்ளனர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எங்களுக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். இன்று, நேற்று வந்தவர்களுக்கு தெரியாவிட்டாலும் 30, 40 வருடங்கள் அவருடன் பழகியவர்கள் என்பதால், எமக்கு அவரைப் பற்றி தெரியும்.
இந்த பக்கத்தில் உள்ளவர்களுடனும் பேசுவார், மறுபக்கத்தில் உள்ளவர்களிடமும் பேசுவார். இதுதான் மகிந்த ராஜபக்ச.
ரணில் விக்ரமசிங்கவை நீக்க முழுமையான போராட்டத்தை முன்னெடுங்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரிடம் கூறுவார்.
மறுபுறம் தொடர்புகொண்டு ரணில் நீங்கள் ஏன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறுவார். இதுதான் பிரச்சினை.
இதேபோலவே தேசிய பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் மகிந்த ராஜபக்சவின் அணுகுமுறை காணப்படுகிறது.
தமிழ் மக்களிடம் ஒன்றை கூறுவார், சிங்கள மக்களிடம் வேறு ஒன்றை கூறுவார். தெற்கில் ஒன்றையும் வடக்கில் ஒன்றையும் கூறுவார்.
இப்படியான தலைவர்களுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பதை புத்தியுள்ளவர்களான நீங்களும் அறிவுடன் எண்ணிப்பாருங்கள் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment