பக்கீர் முஹம்மது அல்தாபி சம்பந்தமாக...!
-Nazeer Ahamed-
நான் இன்றும் மதிக்கும் பல பேச்சாளர்களில் ஒருவர். இரண்டு முறை சந்தித்துள்ளேன். பல வருடங்கள் முன்பு ரியாத்திலிருந்து சென்னை செல்ல கொழும்பு மார்க்கமாக டிக்கெட் எடுத்திருந்தேன். அப்போது கொழும்பு விமான நிலையத்தில் தனியாக ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று சலாம் சொல்லி விட்டு....
'என்ன... தனியாக அமர்ந்துள்ளீர்கள்?' என்று கேட்டேன்.
'இலங்கையில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சிக்காக வந்தேன். நிகழ்ச்சி முடிந்தது. சென்னைக்கு திரும்பிக் கொண்டுள்ளேன்.' என்றார்.
அழைப்பு வரும்வரை அவரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். பிறகு இருவருமே ஒன்றாக விமானத்தை நோக்கி சென்றோம். நாடறிந்த பேச்சாளர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் மிக எளிமையாக என்னோடு பேசிக் கொண்டிருந்தார். பிஜேக்கு பிறகு ஒரு சிறந்த ஆளுமை கிடைத்துள்ளார் என்று நாங்கள் எல்லாம் சந்தோஷப்பட்டோம்.
தற்போது தவ்ஹீத் ஜமாத் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு தாய்லாந்தில் பணி புரிந்து வருவதாக கேள்விப்பட்டேன். என்னவோ தெரியவில்லை. மனது கனத்தது. பல லட்சம் உறுப்பினர் உள்ள ஒரு அமைப்பின் தலைவராக இருந்து விட்டு இவ்வாறு பணியில் அமர்வது என்பது எல்லோராலும் முடியாது. ஏகத்துவத்தை நெஞ்சில் சுமந்த ஒருவரால் தான் முடியும். இள வயதில் மிக உயர்ந்த பதவியை இறைவன் அவருக்கு கொடுத்தான். தற்போது அந்த பதவியை இழந்தாலும் அதே கம்பீரத்தோடு உழைத்து உண்கிறார். இறைவன் அவருக்கு மீண்டும் அது போன்ற பதவியை அளிப்பான்.
பொருளாதாரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இவரது தொழில் மேலும் செழித்து விளங்க இறைவனிடம் பிராரத்திக்கிறேன். பிஜே அவர்களும் அல்தாஃபியை திரும்பவும் அழைப்புப் பணிக்கு அமர்த்திக் கொள்ள இந்த பதிவின் மூலம் கோரிக்கை வைக்கிறேன்.
Nazeer Ahamed
இன்ஷா அல்லாஹ்.
ReplyDelete