என்னை அச்சுறுத்தலாமென, கனவு காணாதீர்கள் - அமெரிக்காவிலிருந்து கோத்தா சீற்றம்
டுபாய் விமான நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க என்னை சந்திப்பதற்காக அமெரிக்கா வர முற்படவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, விரைவில் நாடு திரும்பியதும் அரசாங்கத்தின் போலிபிரசாரங்களுக்கு பதிலடி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக நேர்மையாக செயற்பட்ட என க்கு எதிராக போலியான விசாரணைகளை முன்னெடுத்து என்னை அச்சம் கொள்ள வைக்க முடியுமென அரசாங்கம் நினைத்தால் அது வெரும் கனவாகவே அமையும் என்றும் கோத்தபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துளளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்திப்பதற்காகவே ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்டதாக கூறப்படும் தகவல்களில் எவ்விதமான உண்மைகளும் இல்லை. அதேபோன்று உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்ப்படுத்தப்பட்டமையினால் ராஜபக்ஷ குடும்பத்தினர் குழப்பம் அடைந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மிகவும் மோசமாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் இவ்வாரான போலியான பிரசாரங்களை கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர். உதயங்க வீரதுங்கவிற்கு என்னை சந்திக்க வேண்டிய விசேட தேவைகள் எதுவும் இருக்கும் என நான் நம்பவில்லை. அமெரிக்காவிற்கான அவரது விஜயமானது தனிப்பட்ட ஒன்றாக இருந்திருக்கலாம்.
எவ்வாறாயினும் உதயங்கன வீரதுங்கவின் பெயரை பயன்படுத்தி தொடர்ந்தும் எமக்கு எதிராக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே உதயங்கன சுய விருப்பின் பெயரில் இலங்கைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிசாரிடம் சாட்சியம் அளிப்பதினூடாக போலியான பிரசாரங்களுக்கு முடிவுகட்டமுடியும்.
இதனூடாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன். நீதி அநீதியாகியுள்ள சூழலில் அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு அச்சப்பட்டு இந்த சவாலை தவிர்த்து கொள்கின்றமையானது போலியான பிரசாரங்களுக்கு பதிலளிப்பப்பதாகவே அமையும்.
கடந்த மூன்று ஆணடு காலமாக என்னை அகௌரவப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த மூனறாண்டு காலமாக பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்தது. ரத்னா லங்கா பாதுகாப்பு சேவை , விமானப்படைக்கு 'மிக்" விமானங்களை கொள்வனவு செய்தமை மற்றும் எவன்கார்ட் கடன்சார் பாதுகாப்பு சேவை போன்ற விசாரணைகளுக்கு நான் சாட்சியமளித்துள்ளேன்.
எதிர்காலத்திலும் விசாரணைகளக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன். இதுவரைகாலமும் எனக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாமல் அரசாங்கம் புதிய காரணிகளை தேடி வருகின்றது.
நாட்டுக்காக நேர்மையாக செயற்பட்ட எனக்கு எதிராக போலியான விசாரணைகளை முன்னெடுத்து என்னை அச்சம் கொள்ள வைக்க முடியுமென அரசாங்கம் நினைத்தால் அது வெரும் கனவாகவே அமையும். நாட்டு மக்கள் அரசியல்வாதிகளைவிட முன்னிலையில் உள்ளனர் என்பதை அரசாங்கம் பரிந்து கொள்ள வேண்டும். நாட்டிற்கு எவ்விதமான அபிவிருத்திகளையும் செய்யாது வெறுமனே அடக்கு முறைகளினூடாக ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்ற நிலையில் மக்கள் சரியான சந்தர்ப்பத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். விரைவில் நாடு திரும்பியவுடன் அரசாங்கத்தின் போலியான பிரசாரங்களுக்கு பதில் அளிப்பேன்.
Post a Comment