Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு பேராபத்து, பாரிய அநீதியும் இழைப்பு

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு  நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவில்லை -
ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்எச்.ஹஸ்புல்லாஹ்

(ஆதில் அலி சப்ரி)

கேள்வி: மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தீர்கள். இதனை விளக்கமாக கூறமுடியுமா?

பதில்: 222 மொத்த தேர்தல் தொகுதிகளில் 13 தொகுதிகளிலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவற்றிலும் ஐந்திற்கு மேற்பட்ட தொகுதிகளில் 55 வீதத்திற்கு குறைந்தளவே முஸ்லிம்கள் இருக்கின்றனர். மேலும் இரண்டு தொகுதிகளில் 51 வீதத்திற்கு குறைந்தவர்களாகவே முஸ்லிம்கள் இருக்கின்றனர். இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், 10 அல்லது 11 தொகுதிகளிலேயே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கக்கூடியதாக இருக்கின்றது.  தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை முடிவுகளின்படி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்டத்திலான மாகாண சபைத் தேர்தலில் 222  தேர்தல் தொகுதிகளில் 13 தொகுதிகளில் மாத்திரமே முஸ்லிம்கின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 13 தொகுதிகளில் 3 தொகுதிகளில் முஸ்லிம்களின் சனத்தொகை வீதம் முறையே 50.1, 52 மற்றும் 54.6 என்றே காணப்படுகின்றது.  

2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பின்படி இலங்கையில் 12 வீதமான முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். மேற்படி கணிப்புக்கேற்ப மாகாண சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 22 வீதமாக அமைய வேண்டும். சனத்தொகைக்கேற்ப முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடைவதையே இது காட்டுகின்றது. 

கேள்வி: மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய குழுவில் நீங்களும் அங்கம்வகித்தீர்கள். பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லையா?

பதில்: நான் இவ்வாறான தவறுகளை சரிசெய்ய முயற்சித்தேன். ஆனால் பல பிரச்சினைகள் காணப்பட்டன. மாகாண சபை திருத்தச் சட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது. அதிலே முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை இனத்தவர்கள் சிபாரிசுகளையும் பரிந்துரைகளையும் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. நாட்டின் அனைத்து பாகங்களிலும் முஸ்லிம்கள் சிதறி வாழ்ந்து வருகின்றனர். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அளவுகோல்களும் மிகவும் கடுமையானதாக இருந்தது. 
அதேபோன்று, எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழுவும் இலங்கை முஸ்லிகளின் மாவட்ட மற்றும் மாகாண சனத்தொகையின் இயல்பு குறித்த தெளிவற்றவர்களாகவே இருந்தனர். முஸ்லிம்கள் விடயத்தில் ஆணைக்குழு நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவும் இல்லை என்பதை நான் இங்கு கூறவிரும்புகின்றேன். 
நான் எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் அங்கம் வகித்தபோதும், இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை கூறியே அறிக்கைக்கு கையொப்பமிட்டேன். இவ்விடயம் பாராளுமன்றத்துக்கு வரும் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த 
வேண்டும். 

 கேள்வி: முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கக்கூடிய பகுதிகள் விடப்பட்டுள்ளனவா? உதாரணமாக மாவனல்லை, கம்பஹா?

பதில்: முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய பல இடங்களிலும் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, அநுராதபுரம், குருநாகலை, கேகாலை, காலி, கம்பஹா, கண்டி, மாத்தளை, மற்றும் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு விடுபட்டுள்ளன. மேற்படி இடங்களில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஆணைக்குழுவுக்கு குறித்த பிரதேசங்க ளுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முடியாது போயுள்ளது.
   
கேள்வி: பிரதிநிதித்துவம் இழந்துள்ள பகுதிகளில் பிரதிநிதித்துவம் பெற என்ன செய்யலாம்?

பதில்: பிரதிநிதித்துவம் இழந்துள்ள பகுதிகளுக்கு பாராளுமன்றம் இலகுவாக பிரதிநிதித்துவம் வழங்கலாம்.  பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்படுவோருடன் இணைந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்திற்கு இலகுவாக தீர்வு பெறலாம். நான் இவ்விடயத்தை எல்லை நிர்ணய பணிகளின் ஆரம்பத்திலிருந்தே அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தேன். எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் வாக்களித்தன. அறிக்கை திருத்த விடயங்களில் நான் முழுமையான பங்களிப்பை வழங்கு
வேன். 

கேள்வி: கண்டியின் நிலைமை என்ன? 
பதில்: கண்டியில் முஸ்லிம்களுக்கு மூன்று இடங்கள் பெறமுடியுமாக இருந்தது. இப்போதுள்ள அறிக்கையின் பிரகாரம் ஒன்றே பெறலாம். ஏனைய இரண்டு பாராளுமன்றத்தின் மூலமே பெறலாம். 

No comments

Powered by Blogger.