வங்குரோத்தானது ஏர்செல்
பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல், தனது சேவையை நிறுத்தவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனம் இந்திய அளவில் முக்கியத்துவம் உடைய நிறுவனமாக மாறியமை அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒன்று.
தமிழகத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவர், கடந்த 1999 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின் மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செலின் பங்குகளை வாங்கியது. முதலில் தமிழகத்தில் மட்டும் சேவையைத் தொடங்கி இந்நிறுவனம், படிபடியாக தனது சேவையை விரிவு படுத்து தற்போது நாடு முழுவதும் 8.5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2016 செப்டம்பரில் தனது சேவையைத் தொடங்கி ஜியோ, வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு அதிரடிச் சலுகைகளையும், இலவசங்களையும் அறிவித்தது. இதனையடுத்து மிக குறுகிய காலத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு மாறினர்.
இதனால் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. போட்டியை சமாளிக்க பல்வேறு திட்டங்களையும் அறிமுகப்படுத்தின. இதில் ஏர்செல் நிறுவனமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜியோ வருகைக்கு முந்தைய 2016 ஜூலை காலாண்டில் ரூ. 120 கோடியாக இருந்த அந்நிறுவனத்தின் லாபம், கடந்த 2017 ஜூலை காலாண்டில் ரூ. 5 கோடியாக சரிந்தது. இது தொடர்ந்து சரிந்து கடந்த டிசம்பரில் ரூ.120 கோடி நஷ்டமாகியது.
இதன் காரணமாக, தனது நிறுவனத்தைத் திவால் என்று அறிவிக்கக் கோரி தேசிய சட்ட தீர்ப்பாயயத்தை அணுக உள்ளது.முன்னதாக குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா, கேரளா, பஞ்சாப் போன்ற லாபம் ஈட்டாத தொலைதொடர்பு வட்டாரங்களில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தியது.
மேலும் டவர் உரிமையயாளர்களுக்கு பழைய பாக்கி செலுத்தாததால் ஏர்செல் நிறுவன டவர்கள் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்நிறுவனம் முன் அறிவிப்பின்றி பல்வேறு இடங்களில் தனது சேவையை நிறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியில் வேறு நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஓ பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இனிவரும் காலம் கடுமையானதாக இருக்கும் அதற்குத் தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்
Post a Comment