அம்பாறையில் இடம்பெற்றது என்ன..? முழு விபரங்கள் இதோ
அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது பெரும்பான்மையின குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர். இதனால் அம்பாறை நகர பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை - டி.எஸ்.சேனநாயக்க வீதியில் உள்ள ஜும் ஆப்பள்ளிவாசல், பள்ளிவாசல் காரியாலயம், தங்குமிடம், அதனை அண்மித்து அமையப் பெற்றுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான மூன்று உணவகங்கள், ஒரு பலசரக்குக் கடை ஆகியவற்றின் மீதே பெரும்பான்மை இனக் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதுடன் அங்கிருந்த முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் அம்பாறை நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெரும் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் மேலதிக பொலிஸ் படையணியினரின் பாதுகாப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் நேற்றும் முழுமையாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அம்பாறை நகருக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
' நிலைமையை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவை ஏற்படுமாயின் இராணுவத்தை அழைக்கவும் தயங்கமாட்டோம். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தின் சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் அம்பாறை, டி.எஸ்.சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள நியூ காசிம் உணவகத்துக்கு சில பெரும்பான்மை இன இளைஞர்கள் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் சாப்பிட கொத்து ரொட்டி, பராட்டா கோரியுள்ள நிலையில் அவை தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பரிமாறப்பட்ட உணவில் வெள்ளை நிறத்தில் ஏதோ இருந்தமை தொடர்பில் சுட்டிக்காட்டி, கருத்தடை அல்லது இன விருத்தியை தடுக்கும் வண்ணமான பதார்த்தம் கொத்து ரொட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி அந்த இளைஞர்கள் குழு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து அந்த குழுவினர் உணவகத்தின் காசாளர் கதிரையில் இருந்த இளைஞருடன் இது தொடர்பில் கடும் தொனியில் வாக்கு வாதப்பட்டு, அவர் பேசுவதை வீடியோவும் எடுத்துள்ளனர்.
கருத் தடை மருந்து போட்டீர்களா?
இதன்போது அந்த இளைஞர் குழு, நீங்கள் உணவுக்கு கருத்தடை மாத்திரை போடுகின்றீர்கள் தானே என தொடர்ச்சியாக உரத்த குரலில் கேட்டபோது அதற்கு காசாளர் முதலில் இல்லை என்றும் பின்னர் அச்சுறுத்தும் பாணியில் கேட்கப்படும் போது ஆம் எனவும் பதிலளிக்கும் வீடியோ பதிவு செய்யப்பட்டு அது சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டுள்ளன. எனினும் தன்னை கட்டாயப்படுத்தியே, சிங்கள மொழி சரியாக தெரியாத நிலையில் அந்த வீடியோவை அவர்கள் எடுத்துள்ளதாக காசாளர் தரப்பினர் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது
பஸ்ஸிலும், மோட்டார் சைக்கிளிலும் வந்த குழுவினர்
இந் நிலையில் நள்ளிரவு 12.00 மணி அளவில் பஸ் வண்டியொன்றிலும், 50 வரையிலான மோட்டார் சைக்கிள்களிலும் பெரும்பான்மை இன குழுவினர் குறித்த உணவகம் அமைந்துள்ள இடத்துக்கு வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள் அராஜகமான முறையில் நடந்துகொண்டுள்ளதுடன் உணவகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பள்ளிவாசல், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்:
இந் நிலையில் அந்த உணவகம் மீது மட்டுமல்லாமல் அப்பகுதியில் அமைந்துள்ள மேலும் இரு உணவகங்கள், பலசரக்கு கடை ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ள அந்த குழுவினர் அதனுடன் நிற்காது பள்ளிவாசல் மீதும் அத்து மீறியுள்ளனர்.
முதலில் பள்ளிவாசல் மதிலை முற்றாக உடைந்தெறிந்துள்ள அவர்கள், பின்னர் பள்ளிவாசலின் கண்ணாடிகள், ஜன்னல், கதவுகளை உடைத்துக்கொண்டு பள்ளிவாசலுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அங்கிருந்த புனித அல் குர் ஆன் பிரதிகள் உட்பட சமய நூல்களை தீயிட்டு எரித்துள்ளனர். அத்துடன் பள்ளிவாசலுடன் இணைந்ததாக அமைந்துள்ள பள்ளிவாசல் நிர்வாக காரியாலயத்தையும் அடித்துடைத்து, பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அந்த கட்டிடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அந்த தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்கும் ஏனைய பாதுகாப்பான இடங்களுக்கும் ஓடி தப்பித்துக்கொண்டதாக சம்பவத்துக்கு முகம் கொடுத்த நபர் ஒருவர் தெரிவித்தார்.
தாமதமாக வந்த பொலிஸார்
இந்த வன்முறைகள் இவ்வாறு நடந்தேறும் போது, பள்ளிவாசலில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் இருந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஸ்தலத்திற்கு வரவில்லை எனவும் அவர்கள் தாக்குதல்களும் சேதப்படுத்தல்களும் நிறைவடைந்த பின்னர் ஸ்தலத்திற்கு வந்ததாகவும் சம்பவத்துக்கு முகம்கொடுத்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுமார் 3 நிமிடங்களில் சம்பவ இடத்தை வந்தடைய கூடியதாக இருந்த போதிலும் தாக்குதல் ஆரம்பித்து ஒன்றரை மணி நேரத்தின் பின்னரே பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் வினவிய போது, அது குறித்து கேசரி கேட்கும் வரை தான் அறிந்திருக்கவில்லை எனவும், அவ்வாறான முறைப்பாடுகள் இருப்பின் விரிவான விசாரணைகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
எம்.எப்.எம்.பஸீர்
Post a Comment