முஸ்லிம்கள், ஏமாளிகளாகி விடக்கூடாது..."
முஸ்லிம் அரசியலைப் பொறுத்தமட்டில் ஏமாற்றுதல் என்பது ஒரு வகை வியூகமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. ‘முஸ்லிம் மக்கள் எதைச் சொன்னாலும் நம்பி வாக்களிப்பார்கள்ளூ பின்னர் இரண்டு மாதங்களில் மறந்து விடுவார்கள்’ என்ற அசட்டு நம்பிக்கை, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே இருக்கின்றமையே இதற்குக் காரணம் எனலாம்.
உள்ள10ராட்சி சபைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில், பிரசார மேடைகளில் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளும் பரப்புரைகளும் மக்களை, இன்னுமொரு தடவை ஏமாற்றலாம் என்ற மனக்கணக்கில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று சிந்திக்க வேண்டிய கடப்பாடு, புத்தியுள்ள முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது.
இம்முறையும் தேர்தல் பிரசார கலாசாரத்தில், பெரிய மாற்றங்களைக் காணமுடியாதிருக்கின்றது. மாற்றுக் கட்சிக்காரர்களை வசைபாடுவதும், ஆட்சியைத் தூசிப்பதும் அல்லது புகழ்வதும், மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்ற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மழுப்புவதுமாக இப்போதைய தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நிரம்பியிருக்கின்றன.
மிக முக்கியமாக, அபிவிருத்தியில் இதுகாலவரைக்கும் பெரிதாக எதையும் சாதிக்காதவர்கள், இமாலய அபிவிருத்தி பற்றிப் பேசுகின்றனர். முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதற்குக் கூட, நல்லநேரம் பார்த்தவர்கள், மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக, உரிமைப் போராட்ட வீரர்கள் போல, குரல் உயர்த்திப் பேசுவதையும் காணமுடிகின்றது.
தங்களது இயலுமைக்கு அப்பாற்பட்ட திட்டங்களை அரசியல்வாதிகள் கூறும்போது, ஷகூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவர்கள், வானம் ஏறி வைகுண்டம் போகின்ற| கதையைக் கேட்பது போல இருக்கின்றது. இச்சந்தர்ப்பங்களில், ஆழமாகச் சிந்திப்போருக்கு சிரிப்பை அடக்க முடிவதில்லை. காரியத்தை முடிக்கும் வரைக்குமான ஒருவித நடிப்பாகவே, இந்த அரசியலை முஸ்லிம் அரசியல் நோக்குநர்கள் கருதுகின்றனர். எனவே, முஸ்லிம் வாக்காளர்கள், ஒவ்வோர் அரசியல் தலைமையினதும் அரசியல்வாதியினதும் கடந்தகால வழித்தடங்களை மீட்டுப்பார்த்தே, யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்களுக்கு என்று தனியான அரசியல் இயக்கம் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால் உருவாக்கப்படும் வரைக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கு, குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழ்வோருக்கு இருந்த எதிர்பார்ப்புகள், முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட பின்னர், வேறுவடிவம் எடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் அஷ்ரப், எதிர்பார்ப்புகளை விஞ்சிய ஒரு தலைவராக இருந்தார். அப்துல் கலாமுக்கு முன்னரே, இலங்கை முஸ்லிம்களுக்கு,’பெரிதாகக் கனவு காணுங்கள்’ என்று சொன்னவரும் அவரே.
ஆரம்பத்தில், முஸ்லிம்களுக்கு இருந்த பிரதான பிரச்சினைகள் வாழ்வுரிமை அல்லது இருப்பு பற்றியது என்று கூறலாம். யுத்தசூழல், விடுதலைப்புலிகள், ஏனைய ஆயுதக்குழுக்கள், இந்திய அமைதிப்படை, அரச படைகள் என்பவற்றுக்கு இடையில் உயிரையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ளும் எதிர்பார்ப்புகளே மிகப் பிரதானமாக இருந்தன.
ஆனால், அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி, உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்தரமாக முன்னெடுத்தார். இது வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட முஸ்லிம் அரசியலை உச்சத்துக்குக் கொண்டு சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, அவரது இறப்புக்குப் பின்னரான முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோ அல்லது வேறுபல கட்சிகளை நிறுவிய முஸ்லிம் தலைமைகளோ அரசியல்வாதிகளோ அத்தகைய அரசியலையே முன்னெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம்களுக்கு இருந்தது.
ஆனால், கூட்டிக்கழித்து அவர்களது செயற்பாடுகளுக்கு ஒரு சமன்பாடு கண்டால், அவை எல்லாம் ஏமாற்றங்களையே தந்திருக்கின்றன என்பது வெள்ளிடைமலை. அபிவிருத்தி அரசியலைச் செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் உரிமை அரசியலைச் செய்யவில்லை. உரிமை அரசியலைச் செய்ய முனைந்தவர்களால், அதை வெற்றிகரமாக நிறைவேற்றமுடியவில்லை.
அது ஒருபுறமிருக்க, உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் செய்யாமல், இன்னும் சில அரசியல்வாதிகள் ஷவாயால் வடை சுட்டுக் கொண்டு| மிகவும் தந்திரோபாயமாகக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், முஸ்லிம்களின் பல பிரச்சினைகள், அதாவது தேர்தல் பிரசாரங்களின்போது, மக்கள் மன்றத்தில் அரசியல்வாதிகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்கள், இன்னும் செய்து முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. காணிப் பிரச்சினைகள் இதில் முக்கியமானவை. அம்பாறை மாவட்டத்தில் வட்டமடு, கிரான், கோமாரி, றத்தல், அஷ்ரப் நகர் தொடங்கி திருமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படவில்லை. வடக்கில் இருந்து வெளியேறிய மக்களின் மீள்குடியேற்றமும் அவர்கள் இழந்த காணிகளை மீளப் பெறுதலும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
ஒலுவில் துறைமுகம், சரியாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதுடன், முறையான சாத்திய வள ஆய்வின்றி, துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. அம்பாறை மாவட்ட முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்டு வரும், புதிய நிர்வாக மாவட்டக் கோரிக்கையை, காணி உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் உள்வாங்கியதாக நிறைவேற்றுவதற்கு எந்த முஸ்லிம் தலைமைக்கும் பலம் இல்லாது போயிருக்கின்றது.
நிலாமாறுகால நீதி பற்றியும், மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசப்படுகின்ற ஒரு சூழலில், யுத்தகாலத்தில் இருதலைக் கொள்ளியாகச் சிக்கித்தவித்த முஸ்லிம்கள் இழந்த உரிமைகள், இனவாதத்தால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபைக்கோ, ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கோ முறையாக அறிக்கையிடுவதற்கு எந்த முஸ்லிம் கட்சிக்கும் துணிச்சலில்லை. மாறாக, யாராவது அறிக்கையிட முனைந்தால் அதை ஷபோட்டுக் கொடுக்கின்ற| பாங்கிலான செயற்பாடுகளையே காண முடிகின்றது.
அளுத்கமவில், பேருவளையில், கின்தோட்டையில் நிகழ்த்தப்பட்ட இனவாத சம்ஹாரத்துக்காவது இழப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வக்கில்லை. இனவாதத்துக்கு ஆதரவளித்தமைக்காகவே மஹிந்த ஆட்சியை மாற்றியதாக மார்பு தட்டும் முஸ்லிம் தலைமைகளாலோ, எம்.பிக்களாலோ இந்த இனவாத ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நட்டஈடு கோரியும் நீதிவேண்டியும் ஒருநாள் கூட, நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரிக்கவோ எல்லோரும் ஒருமித்துக் குரல் கொடுக்கவோ முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையிலேயே, இன்று பென்னம் பெரிய வெற்று வாக்குறுதிகளோடும் பொய்மூட்டைகளோடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் மேடை ஏறியிருக்கின்றார்கள்.
உண்மையாகவே, மக்களுக்குச் சொன்னதை செய்யும் அரசியல்வாதிகள் என்றால், மக்கள் அவர்களுக்குத் தாமாகவே வாக்களிப்பார்கள். அவ்வாறு செய்து காட்டிவிட்டு, வாக்குக் கேட்டு வந்திருந்தால், இத்தனை வார்த்தை ஜாலங்களால், மயக்கும் மந்திரங்களை ஓதத்தேவையும் இல்லை. நடக்க முடியாதவற்றை வாக்குறுதியாக வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்க மாட்டாது. இந்தப் போக்கில், அண்மைக்காலத்தில் ஈரூர்கள் மிகப் பகிரங்கமாகவே ஏமாற்றப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று சாய்ந்தமருது, மற்றையது அட்டாளைச்சேனை.
‘சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபை தருவோம்’ என்று கூறிய இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், அந்த மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள். இரண்டாகப் பிரிப்பதா, நான்காகப் பிரிப்பதா என்று ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்காமல், கொடுத்த தேர்தல்கால வாக்குறுதி, எந்தளவுக்குப் பாரதூரமானது என்பதை இன்று, கல்முனை – சாய்ந்தமருது விவகாரத்தில் காணலாம். நடைமுறைச் சாத்தியங்களுக்கு அப்பால் நின்று வழங்கப்பட்ட, பக்குவமற்ற வாக்குறுதிகள், இரண்டறக் கலந்திருந்த ஊர்களுக்கு இடையில், இப்போது ஒருவகையான பகைமையுணர்வுக்கு எண்ணெய் ஊற்றியிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஆனால், வெற்று வாக்குறுதிகளால்தான் இது நேர்ந்தது என்பதையும் மறந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்தச் சூழ்நிலையை வைத்தும், அரசியல் செய்து கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. அட்டாளைச்சேனைக்குத் தேசியப்பட்டியல் வழங்குவதாக, முஸ்லிம் காங்கிரஸினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு வயது பல வருடங்கள்.
கிட்டத்தட்ட, “சீச்சி இந்தப் பழம் புளிக்கும்” என்ற நிலைக்கு, அவ்வூர் மக்கள் வந்துவிட்ட நிலையில், தற்காலிகமாக வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவியை, எம்.எச்.எம்.சல்மான், 27 மாதங்களுக்குப் பிறகு இராஜினாமாச் செய்திருக்கின்றார். எனவே, மீண்டும் அப்பிரதேச மக்களிடையே எதிர்பார்ப்பு துளிர்விட்டது. இந்நிலையில் நேற்றைய தினமே (25) அவ்வூருக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்குவதற்கான நடவடிக்கையை தலைவர் ஹக்கீம் எடுத்திருக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவதற்கு உடன்பட்டிருந்த தேசியப்பட்டியல் எம்.பி பதவியை இன்னும் வழங்கவில்லை. இது தேர்தல் மேடைகளில் பரவலாக வழங்கப்பட்ட வாக்குறுதியல்ல என்பதுடன், இதைப் கோருவோரிடையே பெரிய போட்டிகளும் இல்லை என்ற போதிலும், இம்மாவட்டத்தில் வாக்களித்த 33 ஆயிரம் மக்களுக்குக் கைமாறு செய்வதற்கான காலம் இனிமேலும் இழுத்தடிக்கப்படுமாக இருந்தால் அதுவும் ஏமாற்றும் உத்தியாகவே அமையும்.
இவ்வாறு கடந்த பல வருடங்களாக முஸ்லிம் கட்சிகளும் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் முதலமைச்சரும் மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் முஸ்லிம் மக்களைத் தங்கள் தங்கள் பதவியின் பருமனுக்கு ஏற்றவாறு நம்பவைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே, இம்முறை உள்ள10ராட்சி சபைத் தேர்தலிலும் புதுவிதமான வாக்குறுதியளிக்கும் தந்திரங்களோடு களத்துக்கு வந்திருப்பதைக் காண முடிகின்றது. முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தியில் ஒன்றும் சாதிக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகின்ற கட்சிகளும் அரசியல்வாதிகளும் அபிவிருத்தி பற்றிய முன்மொழிவுகளோடு மேடைகளில் தோன்றுகின்றனர்.
இலட்சக் கணக்கான ரூபாய் பெறுமதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக இதற்கு முன்னர் வாக்குறுதி வழங்கி, அதைக் காற்றில் பறக்க விட்ட அரசியல்வாதிகள், இம்முறை மில்லியன் கணக்கில் அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டு வந்திருப்பதாக மக்களுக்குச் சொல்கின்றனர். உரிமை பற்றி இதுகால வரை பேசவில்லை என்று கருதப்பட்ட அரசியல்வாதிகள், முஸ்லிம் உரிமை அரசியலின் காப்பாளர்கள் போல, பிரசாரம் செய்கின்றனர்.
பெரிய கட்சிகள் தொடங்கி, சிறு கட்சிகள் வரை பல கட்சிகளும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஏற்கெனவே வெளியிட்டிருக்கின்றன. ஆனால், பிரதான முஸ்லிம் கட்சிகள் கொள்கைப் பிரகடனங்களை முன்னிலைப்படுத்தியிருந்தாலும் உள்ன10ராட்சி சபைத் தேர்தலுக்கு உரித்தான, அதாவது உள்ள10ராட்சி மன்றங்களின் அதிகாரம் கிடைத்தால், என்ன செய்வோம் என்ற அடிப்படையில், தேசிய மட்டத்திலான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை என்பது கவனிப்புக்குரியது.
முஸ்லிம் கட்சிகள், ஒரு சின்னத்தில் அல்லாமல் இரண்டு முதல் ஆறு சின்னங்கள் வரை, பல அவதாரங்களை எடுத்திருப்பதால், தேசிய மட்டத்திலான ஒரு விஞ்ஞாபனத்தை வெளியிட முடியாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த இலட்சணத்திலும் தேர்தல் மேடைகளில் அள்ளிவீசப்படும் வாக்குறுதிகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. குறிப்பாக, இவ்வாறான வாக்குறுதிகளைக் கேட்கும்போதே தெரிகின்றது, அவை ஏட்டுச் சுரங்காய்கள் என்று.
இவ்வாறான வாக்குறுதிகளை அள்ளிவீசுவோரின் கடந்தகாலத்தை வைத்து நோக்குகின்ற ஒவ்வோர் அடிமட்ட வாக்காளனுக்கும், இந்த வாக்குறுதிகள் எல்லாம் தம்மிடம் இருந்து வாக்குகளை எடுத்துச் செல்வதற்காக முன்வைக்கப்படும் பசப்பு வார்த்தைகளின் ரகத்தைச் சேர்ந்தவை என்பது நன்றாகவே புரிகின்றது. ஆனாலும், இதையெல்லாம் தாண்டியும் இந்தத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளால் ஒரு தொகுதி மக்கள் ஏமாறுவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கின்றது.
“பூனையைப் பார்த்தால் தெரியும் அது எலி பிடிக்குமா இல்லையா” என்று, சொல்வார்கள். எனவே, ஒவ்வோர் அரசியல்வாதியையும் நன்கு அளந்து பார்த்து, கடந்த காலத்தை நினைந்துப்பார்த்து, மக்கள் வாக்களிக்க வேண்டும். அளவுக்கதிகமாக நம்பிக்கை வைத்து, அளவுக்கதிமாக ஏமாறக் கூடாது என்பதுடன், ‘இதுதான் கடைசிமுறைளூ இந்த முறை மட்டும் அந்தக் கட்சிக்கு வாக்களித்துப் பார்ப்போம்’ என்று எண்ணி வாக்களித்து, முஸ்லிம்கள் மீண்டும் ஏமாளிகளாகி விடக் கூடாது.
Post a Comment