குழப்பத்திற்கு முயன்று தோல்வியடைந்த மகிந்த, இப்போது பிரதமர் பதவியில் ஆர்வமில்லை என்கிறார்
அமைச்சரவை மாற்றம் இந்த வாரம் இடம்பெறும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
“எந்தக் குழப்பங்களும் இன்றி கூட்டு அரசாங்கம் தொடர்ந்து செயற்படும். அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றங்கள் செய்யப்படும்.
இதன்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட மக்கள் ஆணையை நிறைவேற்றவும் சில புதிய முகங்களை அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிமுகம் செய்வார்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, கூட்டு அரசாங்கத்துக்குள் மகிந்த ராஜபக்ச குழப்பத்தை விளைவிக்க முயன்றார். அது தோல்வியில் முடிந்துள்ளது.
இப்போது அவர் பிரதமர் பதவியில் தனக்கு ஆர்வமில்லை என்று கூறுகிறார்.
ஏனென்றால், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அதிக வட்டிக்குப் பெறப்பட்ட வணிக டொலர் கடன்களை திருப்பிச்செலுத்த வேண்டிய காலப்பகுதி, 2019 தொடக்கம் 2020 வரையாகும்.
அண்மைய தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது உண்மையே என்றாலும், ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தமது தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெறும்” என்றும் அவர் கூறினார்.
Post a Comment