எங்கள் நாடு புனிதர்களின் பூமி, ஊடகங்கள் கூறுவதுபோல தீவிரவாதிகள் வாழும் நாடல்ல - பாகிஸ்தான்
மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதுபோல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வாழும் நாடல்ல, எங்கள் நாடு புனிதர்களின் பூமி என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்த லாகூர் இலக்கிய விழாவில் அந்நாட்டின் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி கலந்து கொண்டார். இவ்விழாவுக்கு வந்திருந்த வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்று உரையாற்றிய அவர்,
இதுபோன்ற இலக்கிய விழாக்களில் பங்கேற்க பல நாடுகளில் இருந்து இலக்கியவாதிகள் வருவதால் சமூகத்தில் சகிப்புத்தன்மை அதிகரிக்கும். இதன் மூலம் அன்பு என்னும் நற்செய்தி அவர்கள் நாட்டை சென்றடையும் என்று குறிப்பிட்டார்.
மேலும், பாகிஸ்தானின் முகம் மேற்கத்திய ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப்படுவதுபோல் இது தீவிரவாதிகள் நிறைந்த நாடல்ல; உள்நாட்டு கலாச்சாரம் கலந்த பாரம்பரியமும், புனிதர்களின் போதனைகளும் எங்கள் நாட்டு உண்மை வாழ்க்கையின் நிஜ முகமாகும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment