Header Ads



நபி யூசுஃப் (அலைஹி) அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள்

o பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் தன்னுடைய நல்ல கனவைக் கூட சொல்லிக் காட்டக் கூடாது என்கிற படிப்பினை *அல்குர்ஆன் (12: 4, 5)*

o தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சி நடந்துக் கொள்ளும் முன்மாதிரி. *அல்குர்ஆன் (12: 23 & 33-34)*

o எப்படிப்பட்ட சோதனையான நிலையிலும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த ஈமான் உறுதி நமக்கோர் படிப்பினை *அல்குர்ஆன் (12: 37-40)*

o தன்னை கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடத்தும் தன் முதலாளியிடம் துரோகம் செய்வது அநீதியென்பதை உணர்த்தும் பாடம். *அல்குர்ஆன் (12: 23)*

o நமக்கு கவலை ஏற்படுத்தும் சில விஷயங்கள் நடக்கும்போது, நமக்கு தெரியாமலே அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருப்பான் என்ற படிப்பினை. *அல்குர்ஆன் (12: 15)* *மற்றும் ஸூராவின் கடைசி பகுதி ஆயத்கள்)*

o சோதனைகள் வரும்போது அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அழகிய பொறுமையை மேற்கொண்டால், அதற்காக அல்லாஹ் நமக்கு நல்ல பிரதிபலன்களைத் தருவான் என்று உணர்த்தும் பாடம் *அல்குர்ஆன் (12: 18, 21, 90 & 99-100)*

o நம்முடைய எல்லா கஷ்டங்களையும் அல்லாஹ்விடத்தில், அவனே நீக்கி வைப்பான் என்ற நம்பிக்கையோடு முறையிட வேண்டும் என்பதற்கான படிப்பினை. *அல்குர்ஆன் (12: 86)*

o அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கை வைத்தவர்களை அல்லாஹ் கைவிடமாட்டான் என்ற உண்மைக்கான முன்மாதிரி. *அல்குர்ஆன் (12: 83,90)*

o பொறாமை எண்ணம் ஒருவருக்கு மேலோங்கும்போது அது பிறருக்கு தீய விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்பதை எச்சரிக்கும் பாடம். *அல்குர்ஆன் (12: 8-15)*

o அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து சந்தோஷப்பட்டவர்கள், பின்னாட்களில் அந்த தீங்கின் விளைவுகளை தானும் அதிகளவில் அனுபவிக்க வேண்டிவரும் என்ற படிப்பினை. *அல்குர்ஆன் (12: 88-91)*

o அதிகாரம் நம் கையில் இருக்கும்போதும் கூட, தன்னடக்கத்துடன் பிறருக்கு நன்மை செய்யும் விதத்தில் நடக்கவேண்டும் என்று சொல்லித் தரும் அழகிய பாடம். *அல்குர்ஆன் (12: 99,100)*

o அல்லாஹ் நமக்கு இனி உதவி செய்யமாட்டான் என்ற விரக்தியோடு அவனுடைய அருளில் நம்பிக்கை இழக்கக்கூடியவர்கள், அல்லாஹ்வின் பார்வையில் காஃபிர்கள் என்பதைப் புரிந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டிய பாடம். *அல்குர்ஆன் (12: 87)*

o நாம் எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும், நம்மிடமுள்ள உறுதி குலைந்து விடக்கூடிய ஆபத்தான சூழ்நிலைகள் வரும்போதும் கற்பொழுக்கம் காத்துக்கொள்ள வேண்டிய படிப்பினை. *அல்குர்ஆன் (12: 23)*

o அல்லாஹ் வெறுக்கும் ஒரு பாவத்தை செய்வதற்கு கட்டுப்படுவதைவிட நமக்கு அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து யூசுஃப் நபியவர்கள் சிறை சென்றதில் கிடைக்கும் படிப்பினை *அல்குர்ஆன் (12: 33)*

o நாம் அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டால், நாம் நிரபராதிதான் என்பது நிரூபிக்கப்படுவதற்காக உறுதியாக போராட வேண்டிய ஒரு படிப்பினை *அல்குர்ஆன் (12: 51,52)*

o அல்லாஹ் தனது நபிமார்களுக்கு மட்டுமே கனவுகளின் பலன்களைக் கற்றுத் தந்துள்ளான் என்று புரிந்துக்கொள்ள வேண்டிய பாடம் *அல்குர்ஆன் (12: 36,37)*

o சூழ்ச்சி செய்பவர்கள் வெற்றி பெற்றதைப்போல எண்ணிக் கொண்டாலும், அல்லாஹ் அதை எந்த விதத்திலாவது வெளிப்படுத்தி விடுவான் என்று உணர்த்தும் பாடம். *அல்குர்ஆன் (12: 51,52)*

o ஒருவர் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டால், மறுமுறை அவரை நம்பவேண்டிய சூழ்நிலை வரும்போது, அல்லாஹ்வின் பெயரால் அவரிடம் உறுதிமொழி வாங்கிவிட்டு, அதற்காக அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டவேண்டும் என்ற பாடம். *அல்குர்ஆன் (12: 66)*

o பெற்றோரை கண்ணியப்படுத்தவும் அன்பு செலுத்தவும் கற்றுத்தரும் பாடம்
*அல்குர்ஆன் (12: 99,100)*

o எவ்வளவு பலஹீனங்களும் ஆதரவற்ற நிலையும் ஒருவருக்கு இருந்தாலும், அல்லாஹ் நாடிவிட்டால் உயர்ந்த பதவிகளையும், திடத்தையும் கொடுத்துவிடுவான் என்ற பாடம். *அல்குர்ஆன் (12: 56)*

o நமக்கு தீங்கு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தபிறகு பழி வாங்கும் எண்ணமோ, அவர்களைப் புறக்கணிப்பதோ இல்லாமல், அல்லாஹ்வுக்காக மன்னித்து அவர்கள் செய்தவற்றுக்காக நாமே பாவமன்னிப்பு தேடவேண்டும் என்பதற்கான நல்லுதாரணம். *அல்குர்ஆன் (12:92)*

o பெற்றோரிடம் வரம்பு மீறினால் அடையும் நஷ்டங்களையும், நன்மையான விஷயங்களில் பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடப்பதில் கிடைக்கும் நற்பலன்களையும் உணர்த்தும் படிப்பினை *அல்குர்ஆன் (12: 80)*

o நன்மையான முடிவுக்கான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொள்வதற்காக, பிறருக்கு பாதிப்பில்லாத முறையிலும் மார்க்கம் அனுமதித்த வகையிலும் தக்க சமயத்தில் சில தந்திரங்களை செயல்படுத்தலாம் என்ற படிப்பினை *அல்குர்ஆன் (12: 59-76)*

o கஷ்டப்பட்ட நிலை மாறி நல்ல நிலமைக்கு வந்த பிறகு அல்லாஹ்வை மறந்துவிட்டு தன்னுடைய திறமையால் வந்தது என்று பெருமைப் பேசாமல், நம்முடைய நல்ல நிலைமைக்கு அல்லாஹ்வே முழுமையான காரணம் என்று அவனிடத்தில் சரணாகதி அடையக்கூடிய அந்த பணிவு வேண்டும் என்ற படிப்பினை. அல்குர்ஆன் (12: 101)*

No comments

Powered by Blogger.