"நரியிடம் கோழிகளை ஒப்படைத்திருக்கலாம்.."
பிரதியமைச்சர்கள் பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஐ.தே.கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் சோர்வடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -26- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிலைமை காரணமாக ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டாவது பிளவு விரைவில் நடைபெறவுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீண்டும் களத்திற்கு கொண்டு வர வேண்டும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அதில் கையெழுத்திட ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தினால் மக்களும் மகிழ்ச்சியடையவில்லை. அமைச்சர்களுக்கும் மகிழ்ச்சியில்ல்லை. தேர்தல் சமயத்தில் பிரதமரை வங்கி கொள்ளையன் என்றார்கள். தற்போது திருடனை பிடிக்கும் பொலிஸ் துறையையும் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைவிட நரியிடம் கோழிகளை ஒப்படைத்திருக்கலாம். தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் குறித்து அரசாங்க தரப்பினர் எதனை கூறியிருந்தாலும் நீதியை நிலைநாட்டும் விடயம் என்பது நேற்றுடன் முடிந்து விட்டது என்பதை நாட்டுக்கு கூறிக்கொள்ள வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment