குண்டு வெடிப்பால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மஹிந்த அணி எச்சரிக்கை
தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் டி சொய்ஸா எச்சரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் கொழும்பில் இன்று -21- நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் பஸ் குண்டு வெடிப்பு என்ற கலாச்சாரம் இலங்கையில் இருந்தது.
9 வருடங்களுக்கு முன்னர் கெப்பித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பிற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின் அந்த சத்தம் நிறுத்தப்பட்டது.
ஆனால் இன்று அதிகாலை தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் தனியார் பஸ் ஒன்றில் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை நாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பாதுகாப்பு பிரதானி வெளிப்படுத்த வேண்டும்.
இது யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பயணிகள் பேருந்து என கூறப்படுகிறது.
இந்த அபாய நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரே வழி நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வதேயாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment