வாக்காளர் அறியவேண்டிய, மிகமுக்கிய விசயங்கள்
எதிர்வரும் சனிக்கிழமை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகின்ற போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் புகைப்படங்களை எடுத்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீடியோ காட்சிகளை எடுத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், மற்றும் புகைபிடித்தல் மற்றும் மதுபானப் பாவனை என்பனவும் வாக்களிப்பு நிலைய வளாகத்திற்குள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சார்பாக மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 10ஆம்திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இங்கு பின்வருகின்றவர்களே சமுகமளிக்க முடியும்.
குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்காளர்கள், வாக்கெடுப்பு நிலைய உத்தியோகத்தர்கள், வேட்பாளர்கள், (தமது வட்டாரத்தின் வாக்கெடுப்பு நிலையத்திற்கு மட்டும்) வாக்கெடுப்பு நிலைய முகவர்கள், கண்காணிப்பாளர்கள், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், தெரிவத்தாட்சி அலுவலர்கள், தெரிவத்தாட்சி அலுவலர்களின் அனுமதியைப் பெற்றுள்ள நபர்கள் ஆகியோர் மட்டுமே வாக்களிப்பு நிலைய வளாகத்திற்குள் செல்ல முடியும்.
எந்தவொரு வேட்பாளரும், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அல்லது வாக்களிப்பு நிலைய சுற்று சூழலில் தரித்திருந்து கட்சி மற்றும் வேட்பாளர் ஊக்குவிப்பு செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.
இதேவேளை பின்வரும் செயற்பாடுகளும் வாக்களிப்பு நிலையங்களில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.
கையடக்க தொலைபேசிகளை பயன் படுத்தல், புகைப்படங்களை எடுத்தல், வீடியோக் காட்சிகளை எடுத்தல், சுடு கலன்களை வைத்திருத்தல் மற்றும் புகைபிடித்தல், மதுபானம், போதைப் பொருள் பாவனை ஆகியனவும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
Post a Comment