உதயங்கவை காப்பாற்ற, உக்ரேன் முயற்சி - டுபாய் என்ன செய்யப் போகிறது..?
டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட, ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவரை, தம்மிடம் கையளிக்குமாறு உக்ரேனிய அதிகாரிகள், அபுதாபி அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்குச் செல்லும் வழியில் டுபாய் விமான நிலையத்தில் கடந்த 4ஆம் நாள் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார். அனைத்துலக காவல்துறை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அவர், டுபாய் விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,அபுதாபி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
இவரை சிறிலங்காவுக்குக் கொண்டு வருவதற்காக, ஏழு சிறிலங்கா அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று இன்று டுபாய்க்குப் பயணமாகவுள்ளது.
இந்தக் குழுவில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இருவர், குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
இவர்கள் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
உதயங்க வீரதுங்கவை கூடிய விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அபுதாபி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தற்போது அபுதாபியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை தமது நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு உக்ரேனிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயங்க வீததுங்க தமது நாட்டுக் குடியுரிமை பெற்றவர் என்ற வகையில் அவரைத் தமது நாட்டுக்கு அனுப்புமாறு உக்ரேனிய அதிகாரிகள் கோரியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
Post a Comment