ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் - ரஞ்சனிடம் வலியுறுத்திய சஜித்
அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்குச் சட்டம் ஒழுங்கு அமைச்சு மாற்றி வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சரத் பொன்சேகாவுக்குச் சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவதாக இருந்த போதும் அது தற்போது பிரதமரின் கீழ் அல்லவா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதன் பின்னணி என்ன?’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடத்தில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சினை அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் கையளிக்க வேண்டும் என்று தான் விரும்பினோம்.
கடந்த நாடாளுமன்ற அமர்வின் போதும் கூட நான் உள்ளிட்ட உறுப்பினர்கள் அந்தக் கோரிக்கையைத் தலைவரிடத்தில் முன்வைப்பதற்கான கையொப்பங்களைத் திரட்டுவதற்கு திட்டமிட்டோம்.
அந்தச் சமயத்தில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சஜித் பிரேமதாச போன்றவர்கள் என்னையும் ஏனைய உறுப்பினர்களையும் தற்போது இருக்கும் அரசியல் சூழலில் தலைவருக்கு அழுத்தங்களை வழங்க வேண்டாம் என்று கோரினார்கள்.
அதன் காரணமாகவே நாம் கையொப்பம் பெற்றுத் தலைமைக்கு வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதைக் கைவிட்டிருந்தோம்.
எனினும் தற்போது அமைச்சர் சரத் பொன்சேகா வெளிநாட்டில் இருப்பதால் பிரதமர் அதனைப் பெற்றுக் கொண்டு பின்னர் மாற்றி வழங்குவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
மேலும் நாங்கள் அந்த அமைச்சை அவரிடத்திலேயே வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.
Post a Comment